"நெருப்போடு விளையாடாதீர்கள்!".. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. தமிழக தலைவர்களின் நிலைப்பாடு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு துருவங்களும் இந்த விவகாரத்தில் நேரெதிர் நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.

m k stalin

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: "நெருப்போடு விளையாடாதீர்கள்!"

நேற்று (ஏப்ரல் 14, 2026) வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசை மிகக் கடுமையாக எச்சரித்தார்.

"மக்கள்தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்படும் பரிசா இது? தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கப் பார்க்கிறது மத்திய அரசு. பிரதமர் மோடி அவர்களே, நெருப்போடு விளையாடாதீர்கள்! தமிழர்கள் மான உணர்வு மிக்கவர்கள். 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் போன்ற ஒரு மாபெரும் புரட்சியைத் தமிழகம் மீண்டும் சந்திக்கத் தயங்காது. எங்கள் உரிமையைப் பறிக்க நினைத்தால் தமிழ்நாடு கிளர்ந்தெழும்."

அதேபோல், சமூக வலைதளத்திலும் வீடியோ வெளியிட்ட ஸ்டாலின், தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோ. தேர்தல் பிரச்சாரத்திற்காக அல்லாமல், ஓடிக்கிட்டே இருந்தால், இந்த கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை என்கிற சட்டத்திருத்தத்தை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப் போகிறார்கள் என்று முதலில் இருந்தே நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

உத்தரவாதம் அளிக்காத மோடி

தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பாதிப்படையக் கூடிய மாநிலங்களின் முதல்வர்களையும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்தினோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள், குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசு கூறியதை நாங்கள் கேட்டோம்.

சொன்னதை ஒழுங்காக செய்ததற்காகவே எங்களுக்கு தண்டனை கொடுப்பீர்களா? தென் மாநிலங்கள் எல்லாம் பாதிப்படையாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. நாம் சொன்ன எதைய்டும் காதில் வாங்கமல், திமுகவோடு மட்டுமல்ல, எந்தக் கட்சியோடும் எந்த மாநிலத்தோடும் கலந்து ஆலோசனையை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.

தமிழக எம்பிக்கள் பங்கேற்பார்களா?

நேற்று மரியாதைக்குரிய சோனியா காந்தியும், நாம் கேட்டிருந்த அதே கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்த தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இப்படி மறைத்து மறைத்து செய்வதால், ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் வலுவடைகிறது. தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் எம்பிக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டை பாதிப்பதை மாதிரியோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகிற மாதிரியோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாக காட்டும். முதல்வரான என்னுடைய தலைமையில் தமிழ்நாடே போராடும். ஒவ்வொரு தெருவிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் போராடுவார்கள். இதனை பிரதமர் மோடிக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: "இது தேர்தல் பயம்!"

முதலமைச்சரின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசினார்.

"தேர்தல் நெருங்கும் நேரத்தில் தோல்வி பயத்தில் ஸ்டாலின் டெல்லியை மிரட்டப் பார்க்கிறார். தொகுதி மறுவரையறை குறித்து ஏற்கனவே பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தமிழகத்திற்குப் பாதிப்பு வராது என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால், ஸ்டாலின் மட்டும் எதற்கெடுத்தாலும் 'இந்தி எதிர்ப்பு', 'மாநில உரிமை' எனப் பழைய பல்லவியைப் பாடி மக்களை ஏமாற்றுகிறார். தேர்தலுக்காக மட்டுமே அவருக்கு மாநில உரிமை ஞாபகம் வரும். கடந்த 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது திமுக தமிழகத்திற்காக எதையும் செய்யவில்லை."

பிற தலைவர்களின் ரியாக்‌ஷன்:

அன்புமணி ராமதாஸ் (பாமக): "மத்திய அரசு மேக்ரோ டேட்டாவை எடுத்தாலும், மாநில அரசு சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்" எனத் தனது தேர்தல் அறிக்கையிலேயே வலியுறுத்தியுள்ளார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்: லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் உரிமைகள் கடுமையாக பாதிக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டு இருந்த வீடியோ பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் செய்த போஸ்டில், தேர்தல் நேரத்தில், தோல்வி கண்ணுக்கு தெரிவதால் திமுக டெல்லி எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கிறது என்று கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின், தென்னிந்தியாவின் உரிமைகள் கடுமையாக பாதிக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில்.. வெறும் 2 நாட்கள் முன்னறிவிப்புடன் நாடாளுமன்றத்தைக் கூட்டச் சொல்லி .. இந்த மசோதாவை "அறிமுகப்படுத்தியது" யார்? நாம் இப்போது எதிர்வினையாற்றாவிட்டால், வேறு எப்போதுதான் எதிர்வினையாற்றப் போகிறோம்?

இது நமது மாநிலத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு மிக முக்கியப் பிரச்சினையாகும். எனவே, இந்தத் தேர்தல் காலத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு NDA கட்சி மற்றும் வேட்பாளரிடமும் நாம் பின்வருமாறு கேட்க வேண்டும்: இந்த மசோதா குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? நீங்கள் தமிழகத்தின் பக்கம் நிற்கிறீர்களா, அல்லது டெல்லியின் பக்கமா?, என்று காட்டமாக கேட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+