எடப்பாடிக்கு சாதகம்.. ஆனால் காத்திருக்கு ‘ஆசிட் டெஸ்ட்’.. என்ன முடிவெடுப்பார்? தராசு ஷ்யாம் பரபர!
சென்னை : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ஆசிட் சோதனை எனத் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம் பெற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எடப்பாடிக்கு சில நெருக்கடிகள் இருப்பதாகக் கூறுகிறார் தராசு ஷ்யாம்.
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி ஈபிஎஸ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், கர்நாடகா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார். பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் தனித்தனியாக களமிறங்குகின்றனர்.
கர்நாடகா தேர்தல் : ஓபிஎஸ் 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துள்ள அங்கீகாரம் பற்றியும், இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது பற்றியும், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முன்பு என்னென்ன சாய்ஸ் இருக்கிறது என்பது பற்றியும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசியுள்ளார்.
தராசு ஷ்யாம் பேசுகையில், "அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறி இருந்தாலும், இது ஈபிஎஸ்ஸுக்கு ஒரு நல்ல முன்னேற்றம். கர்நாடகா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஒன்று கர்நாடகா தேர்தலில் வேட்பு மனுவையே தாக்கல் செய்யாமல் விட வேண்டும். அல்லது வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெற வேண்டும்.
எடப்பாடிக்கு சவால்கள் : இனி எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்கினால், இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தவேண்டிய வேட்பாளரை வாபஸ் வாங்கினார் என்ற அரசியல் ரீதியான சங்கட நிலை எடப்பாடிக்கு ஏற்படும். அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம் பெற்ற பிறகு முதல் தேர்தலில் வேட்பாளரை திரும்பப் பெறுவது ஈபிஎஸ்ஸுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.
கர்நாடகா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும், அல்லது வெற்றிக்குப் பக்கத்திலாவது செல்ல வேண்டும். சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கினால் அதுவும் ஈபிஎஸ்ஸுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். எனவே, கர்நாடகா தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ஆசிட் சோதனை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications