கிளாம்பாக்கத்தில் கிளம்பிய மேட்டர்.. காலையிலேயே விழிக்கும் மக்கள்.. என்னாச்சு? அடுத்த புது ஏற்பாடு
சென்னை: பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினால், ஒருசில நடைமுறை சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை கடந்த 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. இதையடுத்து, நேற்று முதல், இந்த பஸ் முனையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.. சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பஸ்கள் உட்பட எல்லா பஸ்களுமே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டன.

பயணிகள்: அந்தவகையில், சென்னை - திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட்டன..
திருச்சி, மதுரை,நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியாக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பஸ்களும் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு: கும்பகோணம், சேலம், விழுப்புரம் உட்பட மற்ற போக்குவரத்து கழக பஸ்கள், ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்களை 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என சிஎம்டிஏ அறிவித்திருக்கிறது என்றாலும், ஒருசில குழப்பங்கள் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
முக்கியமாக, பஸ் நிலையத்தின் உள்ளே நுழைய மாநகர பஸ்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் விரைவு பஸ்களுக்கு தனித்தனி வாயில்களும் உள்ளன.. மேலும் இந்த 2 பஸ்களும் நிறுத்தும் இடங்களுக்கு இடையேயான தூரம், அதிகம் என்பதால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளால், தங்கள் உடைமைகளை கொண்டு செல்ல முடிவதில்லை.
மாநகர பஸ்கள்: மாநகர பஸ்கள் இருக்கும் இடத்திற்கு சிரமத்துடன் செல்ல வேண்டி உள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக பேட்டரி கார் வசதி இருந்தாலும்கூட, விடிகாலை நேரத்தில் அவை இயங்கவில்லை. உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்கும் சிக்கல் உள்ளது.. அங்கிருக்கும் குடிநீர் குழாய்களிலும் இன்னும் தண்ணீர் வரவில்லை என்கிறார்கள்..
மேலும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய பயணிகள் ஓட்டேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜிஎஸ்டி சாலையை, ஆபத்தான முறையில் கடக்க வேண்டும் நிலைமையும் உள்ளது. அதனால்தான், இங்கு நடை மேம்பாலம் உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது.
நடைமுறைகள்: இந்நிலையில், மேலும் சில நடைமுறைகள் விரைவில் கொண்டுவர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலையில் பயணிகள் சாலையை கடக்கவும், பஸ் நிலையத்திற்கு பயணிகள் பாதுகாப்பாக வந்து சேரவும் இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் நியமிக்கப்போவதாக கூறப்படுகிறது.. நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications