அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணையுமா? மீட்டிங்கில் விவாதித்தது என்ன? வானதி சீனிவாசன் பளிச்!
சென்னை: இன்று சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் என்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று தமிழ்நாடு பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னணி தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கேசவ விநாயகம் மற்றும் மாநில துணைத் தலைவர்களான கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக, பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிபடுத்தியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அதிமுக தலைவர்களும் அண்ணாமலையை விமர்சித்து பேசி வருகின்றனர். ஆனால், பாஜக தரப்பு மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் கூட்டணி விவகாரம் பற்றி பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்து கிளம்பிய பாஜக தேசிய மகளிரணி தலைவியும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனிடம், ஒன் இந்தியா சார்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என என அவர் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எந்த மாதிரி செயல்படவேண்டும், தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது பற்றிய முக்கியமான முடிவுகளை இன்றைய கூட்டத்தில் எடுத்துள்ளோம். கூட்டணி தொடர்பாக இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும் வரை அதுகுறித்து நாங்கள் எந்தக் கருத்தும் சொல்வதாக இல்லை." என்றார்.
மேலும், பாஜக கூட்டத்திற்குப் பிறகு ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த பாஜக முக்கிய நிர்வாகிகள், 2024ல் பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். பாஜக அதிக சீட்களில் வெல்ல வேண்டும் என்பதற்காக செயல்திட்டங்களை வகுத்துள்ளோம். வரவிருக்கும் ஆறேழு மாத காலத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது பற்றி திட்டங்களை வகுத்துள்ளோம். தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவு செய்யும். நாங்கள் இப்போது செய்ய வேண்டியது பாஜகவை வளர்ப்பது தான். அதற்கான திட்டங்கள் பற்றி பேசி இருக்கிறோம்.

கூட்டணியைப் பற்றி முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. அதை தேசிய தலைமை முடிவு செய்யும். பாஜக அரசால் பயன் பெற்ற மக்கள் ஏராளமானோர் உள்ளனர். பாதயாத்திரையின்போது அவர்களைச் சந்திக்கிறோம். இதுகுறித்து பொதுவெளியில் பேசுவோம். திமுக அரசு மக்கள் விரோதமாக நடந்து கொள்வது பற்றியும் பேசுகிறோம். இந்த 2 பணிகள் தான் எங்கள் வேலை." எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications