நடுவானில் நடக்கும் உயிர்போராட்டம்.. மாண்டஸ் புயல் எந்த மாவட்டங்களை தாக்க போகிறது? வல்லுனர் வார்னிங்
சென்னை: மாண்டஸ் தமிழ்நாட்டை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் குறித்தும், தமிழ்நாடு வானிலை குறித்தும் சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இது நேற்று மிகவும் மெதுவாக நகர்ந்தது.
இன்று புயலின் நகரும் வேகம் அதிகரித்து உள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக இல்லாமல் வலிமை குறைந்த புயலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புயல் கரையை கடக்கும் வேகம் இன்னும் உறுதியாகவில்லை.
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு.. மாண்டஸ் புயலால் சென்னையில் என்ன நடக்கும்? வெதர்மேன் முக்கிய வார்னிங்

சென்னை ரெயின்ஸ் இந்த
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நிவர் 2002, நிலம் 2012 ஆகிய இரண்டு புயல்கள்தான் சமீபத்தில் மகாபலிபுரம்/ மரக்காணம் அருகே கரையை கடந்த புயல்கள் ஆகும். தற்போது மாண்டஸ் புயலும் அதே இடத்தில் கரையை கடக்கிறது. அதுமட்டுமின்றி வேறு இரண்டு விஷயங்களிலும் இந்த புயல்கள் ஒத்துப்போகின்றன. நிவர், நிலம் இரண்டு புயல்களும் தெற்கு வங்க கடலில் இருந்து நகர்ந்து வந்தவை. இவை தென்கிழக்கு திசையில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்தது. இந்த இரண்டு புயல்களும் கடைசி நேரத்தில் காற்று வெட்டு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. கிழக்கில் இருந்து மேற்கில் நகரும் கஜா, தானே, வர்தா புயல்களில் இப்படி நடப்பது இல்லை.

தமிழ்நாடு வானிலை
மாறாக தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் புயல்தான் இப்படியான பாதிப்பை அடைகிறது. நேற்று காலையில் இருந்து வடமேற்கு திசையில் இந்த மாண்டஸ் புயல் தீவிரமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இதே காலத்தில்தான் புயல் தீவிரம் அடைந்து அதிதீவிர புயலாகவும் நேற்று மாலை மாறியது. தற்போது சென்னையில் இருந்து தென் கிழக்கு பகுதியில் புயல் 325 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதோடு இந்த மாண்டஸ் புயல் தொடர்ந்து வடக்கு தமிழ்நாடு கடலோர மாவட்டங்களை நோக்கி நகரும். மரக்காணம் - மகாபலிபுரம் இடையே இன்று இரவு புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. புயலாகவே இந்த மாண்டஸ் கரையை கடக்கும்.

தீவிர புயல்
தீவிர புயலாக இருக்கும் இந்த மாண்டஸ் புயல் இன்று காலை எப்படியும் வலிமை இழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடக்கு நோக்கி கரையை கடப்பதற்காக இது நகர நகர வலிமை இழந்து சாதாரண புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த மாண்டஸ் புயல் எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறது. பெரும்பாலான வெதர் மாடல்கள் மாண்டஸ் புயல் தீவிரம் குறையாது. தீவிரம் குறையாமல் கரையை கடக்கும் என்றே கூறுகின்றன. ஆனால் சாட்டிலைட் புகைப்படங்களின் அடிப்படையில் பார்த்தால், காற்று வெட்டு மாண்டஸ் புயலுக்கு எதிராக செயல்படுவதை பார்க்க முடியும்.

காற்று வெட்டு
இந்த காற்று வெட்டு எப்படியாவது புயலை வலிமை இழக்க முயன்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் புயலின் கண் பகுதி பாதிக்கப்படவில்லை. கண் பகுதி பாதிப்பு இன்றி அப்படியேதான் உள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக இல்லாமல் புயலாக மட்டுமே இருக்கும். இதனால்தான் இந்த புயல் உயிரோடு இருக்க போராடிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தோம். இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி இந்த அதிதீவிர புயல் வெறும் புயலாக மாறி இன்னும் 6 மணி நேரத்தில் வலிமை இழக்கும் என்று கூறியுள்ளது. ஆனால் வெதர் மாடல்களின் கணிப்பின்படி புயல் கண்டிப்பாக தீவிர புயலாகவே கரையை கடக்கும். வடக்கு தமிழ்நாட்டில் கரையை கடக்கும். வலிமையான புயலாக 100 km/h காற்று வேகத்தில் கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளது.

சூறைக்காற்று
நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் பிற கடலோரப் பகுதிகள் சூறைக்காற்றுடன் காணப்படுகின்றன. அடுத்த 24 மணி நேரத்திற்கும் இதே நிலைமைதான் இருக்கும். புயல் கரையை கடக்கும் வரை, இந்த 24 மணி நேரத்தில் மரக்காணம் மற்றும் புலிகாட் இடையே கடற்கரையோர பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். சூறாவளி நாகப்பட்டினத்திற்கு கிழக்கே நீடிப்பதால் டெல்டா பகுதிகளில் காலை நேரங்களில் காற்று வீசும். சாட்டிலைட் புகைப்படங்களில் இருப்பது போல புயல் வலிமை குறையுமா என்பது போக போகத்தான் தெரியும். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் குறிப்பாக புதுச்சேரி மற்றும் சென்னை இடையே கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த பகுதியில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலின் மையம் கரையை கடக்கும் நேரத்தில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.