பக்கா பிளான்! எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க ரெடி.. படகுகளையும் தயார் செய்யும் சென்னை மாநகராட்சி
சென்னை: பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னையில் கனமழை பெய்தாலும் அதைச் சமாளிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சமீபத்தில் தான் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சமயத்தில் தான் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த வாரமே கனமழை வெளுத்து வாங்கியது.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை முடியும் வரையில் இதேபோல மழை கொட்டி தீர்க்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். சென்னையில் இதற்கு முன்னால் வரை சிறு மழை என்றாலே சாலைகளில் நீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் மழை என்றாலே சென்னையில் அடுத்த சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் கண்டிப்பாக இருக்கும் என்ற சூழலே இருந்து வந்தது.

சென்னை மாநகராட்சி
இந்த ஆண்டு மழை நீர் தேங்குவதைத் தடுக்க சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும் கூட பருவமழை தொடங்கும் முன்பு இந்த பணிகளை முடிக்க முடியுமா எனப் பலரும் சந்தேகம் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வடிகால் பணிகள் நிறைவடைந்தது.

நடவடிக்கை
இதன் காரணமாகவே கடந்த வாரம் கனமழை வெளுத்து வாங்கிய போதிலும், சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் கொஞ்ச நேரத்திலேயே வெள்ள நீர் வடிந்தது. வரும் காலத்தில் கனமழை தொடரும் எனக் கூறப்படு நிலையில், அதைச் சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டு உள்ளதாகச் சென்னை மேயர் பிரியா கூட சமீபத்தில் கூறி இருந்தார்.

படகுகள்
வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை கொட்டி தீர்த்தால், பெருநகர சென்னை மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் மழைநீர்த் தேக்கம் அகற்றும் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டலம் 13, வார்டு 176, 4ஆவது மெயின் ரோடு , ஏஜிஎஸ் காலனியில் படகு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மோட்டர் பம்ப்
இதுபோல சென்னையில் மழை நீர் தேங்கினால் அதை விரைந்து அகற்ற பல்வேறு நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நீர் தேங்கும் இடங்களிலும் விரைந்து மோட்டர் பம்ப் மூலம் மழை நீர் விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினார். இதற்காக மோட்டர் பம்ப்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேவைப்பட்டால் கூடுதல் மோட்டர் பம்ப்களை வாங்கவும் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications