ஆன்மிகத்துக்காக தி.மு.க அரசு செய்தவை என்ன? முதலமைச்சர் பேச்சும், உண்மை நிலவரமும்
சென்னை: 'ஆன்மிகத்துக்கு எதிரானதல்ல திமுக' என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையே 1945 ஆம் ஆண்டு 'பராசக்தி' பட வசனத்தில் 'கோயில் கூடாது என்பதல்ல; அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது' என்றார் மு.கருணாநிதி.
தமிழ்நாட்டில் ஆன்மிகம் சர்ச்சைப் பொருளாக மாறியுள்ளதைப்போல அன்றைக்கு 'பராசக்தி' படத்தின் வசனமும் சர்ச்சையாக ஊதிப் பெரிதாக்கப்பட்டது.
காலம்காலமாகத் தொடரும் ஆன்மிக சர்ச்சைக்கு திமுக தொடர்ந்து விளக்கம் கொடுத்து வந்தாலும் ஒரே பாட்டைத்தான் சிலர் பாடி வருகின்றனர். திராவிட இயக்கமும் சரி, திமுகவும் சரி ஆன்மிக மரபை விமர்சிக்கவில்லை. அதன் பொருட்டு கட்டிக்காப்பாற்றப்படும் பாகுபாட்டையே விமர்சித்துக் கேள்வி எழுப்பி வந்துள்ளன.

ஆன்மிகமும் திராவிட இயக்கமும்:
'கோயில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்க வேண்டும்' என்றொரு கருத்தை சிலர் பேசி வருகின்றனர். இதற்குப் பின்னால் உள்ள வரலாற்று உண்மை என்ன? ஒருகாலத்தில் கோயில்கள் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. தொடர்ந்து, ஜமீன்தார்களின் கைகளில் இருந்தன. கோயில் என்றால் அதற்குச் சொந்தமான நிலங்கள், சொத்துகள் அனைத்தும் சேர்ந்தவைதான். இதன் உரிமை பெரும் நிலக்கிழார்களிடம் இருந்தது. அவர்கள் அதை தங்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், இதனை ஒழிப்பதற்குச் சட்டம் தேவைப்பட்டது. முதன்முதலாக 1922 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சிதான், முறையற்றுக் கிடந்த கோயில் சொத்துகளைக் காப்பாற்றும் வகையில் 'இந்து அறநிலையச் சட்டத்தை' அறிமுகப்படுத்தியது. அதற்கு முன்னால் நிலவிய 'ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?' என்ற மனோபாவத்தை மாற்றி பாமர மக்கள் பயன்பெறும் வகையில் கோயில் சொத்துகளை ஜனநாயகப்படுத்தினர். 1925 ஆம் ஆண்டில்தான் இச்சட்டம் அமலுக்கு வந்தது. அதன் பலனாக 1927 ஆம் ஆண்டில் 'இந்து சமய வாரியம்' உருவாக்கப்பட்டது. இது 1951 ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறையாக வளர்ச்சியடைந்தது.

கோயில் நிதியில் கருணை இல்லங்கள்:
கோவில் வருமானம் முழுவதும் செல்வந்தர்களால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை சமூகநலப் பணிகளின் பக்கம் மடைமாற்றம் செய்யப்பட்டன. இந்தச் சட்டம் வந்ததன் பயன் என்ன தெரியுமா? கோயில்கள் மூலம் வரும் வருவாயை வைத்து ஆதரவற்றக் குழந்தைகளுக்கு கருணை இல்லங்களைக் கட்டிக் கொடுத்தார் மு.கருணாநிதி. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்குச் செலவழித்தார். இது 1970 ஆம் ஆண்டுகளில் நடந்தது. ஒரு காலத்தில் கோயில் வாசலைக்கூட மிதிக்க முடியாமல் நின்ற அடித்தட்டு மக்கள் இதன்மூலம் வந்த வருவாயின் பலனை அனுபவித்தது அப்போதுதான் நடந்தது. அதேபோல், பரம்பரை தொழிலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் முறையை ஒழித்து 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' எனச் சட்டம் இயற்றப்பட்டதும் கலைஞரின் ஆட்சிக்காலத்தில்தான். இப்படித் தனி உடைமையாக இருந்த கோயில் சொத்துகளை அரசுடைமையாக்கி மக்கள் நலப்பணிக்கு மாற்றிய கட்சியைப் பார்த்துத்தான் மதவாத சக்திகள் 'ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி திமுக' எனப் பிரசாரம் செய்கின்றன. கோயில்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தை மக்களுக்கு எடுத்து வழங்கிய ஆட்சிமுறையை மாற்றி, மீண்டும் அரச பரம்பரை ஆட்சியைக் கொண்டுவரச் சொல்கிறார்கள். 'நீதிக்கட்சி' தொடங்கிய வைத்த ஜனநாயகப் போராட்டத்தின் மூலம்தான் தனிநபர்களிடம் சிக்கிக் கிடந்த திருமடங்கள் மற்றும் கோயில்களின் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டு எடுத்து அரசின் கஜானாவுக்கு கொண்டு வந்தார், அன்றைய முதலலமைச்சர் மு.கருணாநிதி.

கோவில் குடமுழுக்குக்கு ரூ.8484 கோடி!
1948 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் முடங்கி நின்ற திருவாரூர் தேரை மீண்டும் இயங்கியதும் கருணாநிதியின் ஆட்சியில்தான். இதற்காக அதிநவீன உபகரணங்களை வரவைத்து வீதிகளில் உலாவர செய்தார். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின் திருவாரூர் வீதிகளில் தேர் உலா வந்தது. அண்மையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 'கலைஞர் ஆட்சியில்தான் 432 கோயில்களுக்கு 8484 கோடி செலவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது' எனப் பேட்டி கொடுத்திருந்தார்.

10 ஆயிரம் பூசாரிகளுக்கு சைக்கிள்
'ஆன்மிகத்துக்கு திமுக எதிரானது' எனத் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றனர். மேற்குறிப்பிட்ட திருப்பணிகள் எல்லாம் திமுக ஆட்சியில்தான் நடந்தன. 2006- 07 ஆட்சிக் காலத்தில் மட்டும் 240 தேர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றன. அதேகாலத்தில் கிராமக் கோயில் பூசாரிகளுக்காக நலவாரியம் ஏற்படுத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு 10 ஆயிரம் பூசாரிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்தது. பெருந்தெய்வ வழிபாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர்களின் 70 கோயில்களுக்கு தலா 25 ஆயிரம் வீதம் 17.50 லட்சம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கோயில்களுக்கு வழங்கப்படும் 75 லட்ச ரூபாய் நிதி, 3 கோடியாக உயர்த்தப்பட்டது. அரசு நிர்வாகத்தில் மு.கருணாநிதி உண்டாக்கிய மாற்றங்கள் இவை. இலக்கியரீதியாகவும் அவர் சிலவற்றைச் செய்தார். நாட்டார் வழக்கு மரபுக் கதையாடலான பொன்னர் சங்கரை திரைக்குக் கொண்டு சென்றார். விளிம்புநிலை மக்களின் உரிமையை முன்னிறுத்திய ராமானுஜருக்குக் காவியம் படைத்தார். தெலுங்கில் அதை மொழிமாற்றம் செய்து கொள்வதற்கு, 'ராயல்டியே வேண்டாம்' என்றார். இந்தக் கட்சியின் ஆட்சியைத்தான் 'ஆன்மிகத்துக்கு எதிரானது' என்கிறார்கள் மதவாத சக்திகள். இவர்களின் குற்றச்சாட்டு குறித்து திராவிட இயக்க எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனினிடம் பேசினோம்.

தியாகராயருக்கு அனுமதி மறுப்பு:
"திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் இயக்கம் 'நீதிக்கட்சி'. இது தொடங்கியதே கோயில் உரிமை போராட்ட பிரச்னையில்தான். இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த பி.டி.தியாகராயர், சி.நடேசன் ஆகிய இருவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். முழு பக்திமான்கள். அந்தக் காலத்தில் மயிலாப்பூர் கோயில் திருப்பணிக்காக தியாகராயர் 5 ஆயிரம் ரூபாய் நன்கொடையை கொடுக்கிறார். தங்கம் விலை 2 ரூபாய்க்கு விற்ற காலத்தில் இவ்வளவு பணத்தைக் கொடுக்கிறார். ஆனாலும் மயிலாப்பூர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தியாகராயருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. காரணம், அவர் சூத்திரர். இவரை ஒரு குமாஸ்தா பணியில் உள்ள ஒருவர்தான் தடுக்கிறார். காரணம், அந்த நபர் பிராமணர். சென்னை மாநகராட்சியின் தலைவரான தியாகராயருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பொருட்டுதான் 1922 ஆம் ஆண்டில் 'நீதிக்கட்சி' ஆட்சிக்கு வந்ததும் 'இந்து அறநிலையச் சட்டம்' கொண்டுவரப்படுகிறது. அன்றைக்கு இருந்த 'இரட்டை வாக்குரிமை' மூலம் குறைந்த செல்வாக்கில் ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வந்தனர். இதே மரபில் ஆட்சிக்கு வந்த அண்ணா, 'ஓர் அரசியல் கட்சி என்பது நாத்திகக் கொள்கையுடன் இயங்க முடியாது. ஆகவே, ஒன்றே குலம். ஒருவனே தேவன்' என்றார். அவரின் தொடர்ச்சியாக வந்த மு.கருணாநிதியும், 'அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற உரிமையைப் பெற்றுத் தரும் சட்டத்தை நிறைவேற்றுகிறார். அதிலும், 'தமிழில் அர்ச்சனை' என்ற உரிமையைப் பெற்றுத் தருகிறார். எதையும் அதிகாரத்தின் மூலம் திணிக்கவில்லை. சட்டரீதியாகவே போராடிப் பெற்றார். 'நீதிக்கட்சி' காலத்தில் தியாகராயரை குடமுழுக்கின்போது மேலே ஏறவிடாமல் தடுத்த அதே மயிலாப்பூர் கோயிலில், 1996-2001 மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் குடமுழுக்கு நடந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன், தமிழில் குடமுழுக்கு நடத்தினார். காஞ்சி ஜெயேந்திரர் அருகில் கோபுர உச்சியில் டி.ஆர்.பாலு நின்றிருந்தார். இந்த உரிமைகள் எல்லாம் எளிதாக வந்துவிடவில்லை.

பட்டுச்சட்டையில் மு.கருணாநிதி:
திமுக ஆட்சியில்தான் வருமானம் இல்லாத கோயில்களில்கூட ஒருகால பூஜை கட்டாயமாக்கப்பட்டது. திருவண்ணாமலை கோயில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவிருந்ததைத் தடுத்து, மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டினார். திமுக அரசுதான் 1975 ஆம் ஆண்டு அண்ணாமலையார் கோயிலுக்கு முழுமையாக திருப்பணியை செய்தது. 'தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது விழாவை நடத்தினால் ஆட்சிக்கு ஆபத்து வரும்' என சிலர் புரளியைக் கிளப்பியபோது, கொஞ்சம்கூட தயங்காமல் அந்த விழாவை விமரிசையாகக் கொண்டாடினார், அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. தனது திருமணத்தின்போதே கருப்புச்சட்டையை அணிந்த மு.கருணாநிதி, இந்த விழாவுக்கு பட்டுவேட்டி, பட்டுச் சட்டையை அணிந்து வந்தார். இதன் தொடர்ச்சியாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின்படி 58 பேருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 10 மாத ஆட்சிக்காலத்துக்குள் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களை அரசின் கஜானாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இது ஒரு வரலாற்றுச் சாதனை.

முதலமைச்சர் ஸ்டாலின் அரசும் ஆன்மிகமும்:
தற்போது ராமலிங்க வள்ளலாருக்கு 200வது பிறந்தநாள் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 300 கோடியை வழங்கியுள்ளார். அதேபோல், பழனி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 23 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துள்ளார். 25 கோடி ரூபாய் செலவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் 2 ஆண்டுகளில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட மாடல் ஆட்சி கோயில் சொத்துகளை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஆனால், ஆன்மிக அரசியல் பேசுகிறவர்களின் கட்சி, தற்போதுதான் வடமாநிலங்களில் இதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளது. நாம் எந்தளவு முன்னேறியிருக்கிறோம் என்பதற்கு இதுவே சான்று'' என்கிறார், கோவி.லெனின்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications