பாமக தலைவர் அன்புமணி நீக்கம்! வந்து விழுந்த கேள்வி.. இரண்டு நொடி யோசித்து அண்ணாமலை கொடுத்த பதில்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அந்த பதவியில் இருந்து நீக்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் இன்று அறிவித்தார். மேலும், பாமகவின் தலைவராகத் தானே செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதற்கிடையே பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்குக் கூட்டணியில் உள்ள பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நீண்ட காலமாகவே மோதல் இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கூட்டணி விவகாரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகச் சொல்லப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும் கூட இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்றும் நீண்ட போராட்டத்திற்கு பிறகே உடன்பாடு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அன்புமணி நீக்கம்
இதற்கிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். மேலும், பாமக தலைவராகத் தானே செயல்படப் போவதாகவும் ராமதாஸ் அறிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வரும் 2026 சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை வகுத்துள்ளேன். அதற்காகக் கட்சி அமைப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.
அதன்படி பாமக எனும் இயக்கத்தைத் தொடங்கிய நிறுவனராகிய ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதுடன் கட்சியின் தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் பொறுப்பு வகித்து வரும் மருத்துவர் அன்புமணி ராமதாஸை தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன்" என்று அறிவித்திருந்தார்.
கடந்த கால மோதல்
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அது இப்போது பொதுவெளிக்கே வந்துவிட்டது. முன்னதாக பாமக இளைஞர் அணித் தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்திருந்தார். இருப்பினும், தனது சகோதரி மகனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டதை அன்புமணி விரும்பவில்லை. அப்போது மேடையிலேயே ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் தான் அன்புமணி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை
இதற்கிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். அப்போது பாமக தலைவர் அன்புமணி நீக்கம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இருப்பினும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் நேரடியாகப் பதிலளிக்க மறுத்துவிட்டார். இது பாமகவின் உட்கட்சி விவகாரம் என்றும் இது குறித்து அவர்களே நல்ல முடிவை எடுப்பார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
அண்ணாமலை சொன்ன பதில்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேலும் கூறுகையில், "அது அவர்களின் உட்கட்சி விவகாரம். பாமக ஒரு பலமான கட்சி. வெளியே இருந்து பாஜக சார்பில் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்காது என நினைக்கிறோம். எதுவாக இருந்தாலும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இணைந்து நல்ல முடிவை எடுப்பார்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவார்கள், தமிழக மக்களுக்காகத் தொடர்ந்து உழைப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications