இன்று முதல் எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? தேர்தல் நடத்தை விதியால் பெரிய மாற்றம்! லிஸ்ட்டை பாருங்க
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். இந்த விதிகள் தேர்தல் ரிசல்ட் வரும் வரை தொடரும். இதனால் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அதன் விபரம் வருமாறு:
நாடே எதிர்பார்த்த லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது லோக்சபா தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார்.

இந்த வேளையில் 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கான 5 ஆண்டு சட்டசபை காலம் முடிவுக்கு வர உள்ள நிலையில் அங்கும் தேர்தல் நடத்தும் தேதி வெளியாக உள்ளது.
இன்று தேர்தல் தேதி வெளியானவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இன்று அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் தேதி வரை அமலில் இருக்கும். நியாயமான தேர்தலை உறுதிப்படுத்தும் வகையில் தான் இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதற்காக அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காலத்தில் அரசாங்கம், அரசியல்வாதிகளின் செயல்பாடு மொத்தமாக மாறிவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் வந்துவிட்டால் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் பின்பற்ற வேண்டிய ரூல்ஸ் விபரம் வருமாறு:
* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் நிதி மானியங்கள், புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. இவற்றை செய்ய தடை விதிக்கப்படும். மாறாக பழைய நிதி உதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
* பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர், மாநில அமைச்சர்கள் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவோ முடியாது. மாறாக அரசு பணியில் உள்ள அதிகாரிகள் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கலாம்.
* போட்டி தேர்வு முடிவு, நியமனம் உள்ளிட்டவை தடை செய்யப்படும். இது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த உத்தரவு பின்பற்றப்படும்.
* லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் எதையும் செய்ய முடியாது.
* தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் அரசு இயந்திரத்தை வழக்கம்போல் பயன்படுத்த முடியாது.
* தேர்தல் கூட்டங்களுக்கு செல்லும்போது அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள், நிபந்தனைகள் செயல்பாட்டில் இருக்கும்.
* தேர்தல் பிரசார வேளைகளில் அரசு பங்களாக்கள், ஓய்வு இல்லங்கள், அரசு விடுதிகளை ஆளும் கட்சியினரும், அந்த கட்சியின் வேட்பாளர்களும் பயன்படுத்த முடியாது. மேலும் அதனை பிரசார அலுவலகமாகவும் பயன்படுத்த முடியாது.
* தேர்தல் வேளையில் செய்தித்தாள்கள் உள்பட பிற ஊடகங்களில் பணம் கொடுத்து அரசு திட்டங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் அளிக்க முடியாது. மீறினால் நடவடிக்கை பாயும்.












Click it and Unblock the Notifications