மதமாற்ற முயற்சி நடக்கவே இல்லை.. சிபிஐ தடாலடி.. அப்போ அண்ணாமலை சொன்னது? வெடிக்கும் விவாதம்!
சென்னை: மைக்கேல்பட்டி பள்ளி மாணவியை, மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். கட்டாய மதமாற்ற முயற்சியே தற்கொலைக்கு காரணம் என பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டியது. இந்த நிலையில், மாணவியை மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
அரியலூரைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேலநிலைப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தொடர்ந்து வாந்தி எடுத்ததையடுத்து, மறுநாள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி பூச்சி மருந்தை உட்கொண்ட விஷயம் தெரியவந்ததால், உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 2022 ஜனவரி 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மாணவி தற்கொலை: இந்த நிலையில், தன்னை மதம் மாறும்படி அந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு உடன்படாததால் தன்னை அதிகமாக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் அந்த மாணவி சொல்வது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. ஜனவரி 16 ஆம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், விடுதியைச் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்தியதாக விடுதி வார்டன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். 2022 ஜனவரி 19 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
மாணவி மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டாய மதமாற்ற முயற்சியால்தான் மாணவி உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்து, பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்புகள் கோரின. அந்த நேரத்தில், மதம் மாறச் சொல்லி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று குற்றம்சாட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு: தூய இருதய மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த மாணவி, பள்ளி நிர்வாகம் சார்பாக, மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள பள்ளியில் இருந்த விஷத் தன்மை கொண்ட திரவத்தை அருந்தியுள்ளார். மருத்துவமனையில் மாணவி மரணமடைந்துள்ளார். பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி மரணத்திற்கு முன் பேசிய வீடியோ பதிவு மனதை பதற வைக்கும்.
கட்டாய மதமாற்றம்: போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்திற்கு முன் மாணவி பேசிய வீடியோ பதிவிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அதில் கட்டாய மத மாற்றம் செய்வதற்காக ஏற்பட்ட மன அழுத்தத்தை பற்றிய எந்த குறிப்பும் இல்லை. ஆகவே, அரசு நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மதமாற்றத் தடை சட்டம் அமல்படுத்த வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு நிதி உதவி, அரசு வேலை அளிக்க வேண்டும். மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் எனக் கூறி இருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பாஜக போராட்டம்: பாஜக-வும், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும், கிறிஸ்தவ மதத்துக்கு மாற வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால்தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி போராட்டங்களை நடத்தின. அந்தப் பள்ளி நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும், பள்ளிக்கூடத்தை மூட வேண்டும் என்று பாஜக-வினர் வலியுறுத்தினர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக தலைவர்கள், மத மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தியதுதான் மாணவி தற்கொலைக்குக் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் பேசினர்.
போலீஸ் அளித்த விளக்கம்: இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ரவளிப்ரியா விளக்கம் அளித்தார். சிகிச்சையில் இருந்த மாணவியிடம் மருத்துவர்களின் அனுமதியுடன் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலம் பெற்றார். அதில், மதமாற்றம் தொடர்பாக எந்தவிதத் தகவலையும் அந்த மாணவி தெரிவிக்கவில்லை. மேலும், மாணவியின் பெற்றோரும் மதமாற்றம் போன்ற தகவலைச் சொல்லவில்லை. மாஜிஸ்ட்ரேட் கொடுத்த தகவலிலும் அது போன்ற தகவல் இல்லை. எனவே, மதமாற்றம் குறித்து எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படவில்லை என்று கூறினார்.
வழக்கு விசாரணை: இதற்கிடையே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, சிபிஐ திருச்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. மதம் மாற அவரை யாரும் வற்புறுத்தவில்லை. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று சிபிஐ மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பதில் அளித்துள்ளது.
மதமாற்ற குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ: பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக 141 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நன்கு படிக்கும் லாவண்யாவை பிற வேலைகளை செய்ய அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது. மாணவியை பிற வேலைகள் செய்யுமாறு அறிவுறுத்தியதால், அவர் தற்கொலை செய்துள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன. ஆனால், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மைக்கேல்பட்டி பள்ளி மாணவியை, மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வந்த நிலையில், மாணவி மரணத்திற்கு மத மாற்ற முயற்சி காரணம் அல்ல என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
-
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications