அதை எல்லாம் பொருட்படுத்தாதீங்க.. பாஜகவை லெஃப்ட் ஹேண்டில் ஒதுக்கிய எடப்பாடி.. போட்டு உடைச்சிட்டாரே
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறது. அது சாத்தியம் இல்லை. கூட்டணி ஆட்சி என்பது தொண்டர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக சொல்லும் வார்த்தை. அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம், என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார்.
அதிமுகவின் கூட்டணி ஆட்சி குறித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜக நிர்வாகிகளை விட பாஜக தொண்டர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பேச்சு காரணமாக கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி சில மாதங்களே ஆகின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இப்போதே ஏகப்பட்ட பிரச்சனைகள் நிலவி வருகின்றன. முக்கியமாக கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, இதற்கு அதிமுகதான் தலைமை என்று அமித் ஷா குறிப்பிட்டு இருந்தார். அதாவது அதிமுகதான் தலைமை என்றாலும்.. ஆட்சி தனித்த ஆட்சி அல்ல.. அதிமுக - பாஜகவின் கூட்டு ஆட்சிதான், அதாவது ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறி இருந்தார். பல ஆங்கில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்.. ஆட்சியில் பங்கு எடுப்போம் என்று கூறினார்.
இந்த கூட்டணி வென்றால் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற கேள்வி கடுமையாக எழுந்துள்ளது.
அண்ணாமலை - தனிப்பெரும் ஆட்சி
அமித் ஷா கூட்டணி ஆட்சி நடக்கும் என்று கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பல இடங்களில் தனிப்பெரும் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், என் கட்சித் தலைவர் அமித்ஷா 'கூட்டணி ஆட்சி' என பேசிய பின்பும், நான் அதைத் தூக்கிப் பிடிக்கவில்லை என்றால் எதற்கு தொண்டனாக இருக்க வேண்டும்? கூட்டணி ஆட்சி என்று மூன்று முறை அமித்ஷா தெளிவுப்படுத்தி விட்டார்; இதில் மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் அதிமுக பேசலாம்.
கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்துவிட்டார். அதில் நான் கருத்து சொல்ல முடியாது. ஒரு தொண்டனாக அதை ஏற்றுக்கொள்வேன், என்று கூறி உள்ளார்.
எடப்பாடி பதிலடி
இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை, அமித் ஷாவிற்கு திருவாரூரில் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க அதிமுக ஒன்றும் ஏமாளி அல்ல.. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்.. வேண்டாம் என்றால் வேண்டாம்.. அதைப்பற்றி கவலையில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளார். அதாவது பாஜக என்ன கேட்டாலும் கூட்டணியில் இடம் கிடையாது என்பதை எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறி உள்ளார்.
எடப்பாடி விளக்கம்
இப்படிப்பட்ட நிலையில்தான் ஊடகம் ஒன்றிற்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் மீண்டும் பாஜகவை சீண்டி உள்ளார். அதில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி என்று கூறி வருகிறது. அது சாத்தியம் இல்லை. கூட்டணி ஆட்சி என்பது தொண்டர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக சொல்லும் வார்த்தை. அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம். எங்கள் கூட்டணி ஆனால் வலுவாக உள்ளது. இந்த கூட்டணிக்கு எந்த சிக்கலும் வரவே வராது. எங்களுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் கூட்டணி ஆட்சி நடக்காது.
நாங்கள் பாஜகவை எதிர்க்கவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்று கூறியது பாஜகவை விமர்சனம் செய்வதற்காக இல்லை. அது திமுகவிற்கு பதிலடி கொடுப்பதற்காக. பாஜக எங்களையோ விழுங்கிவிடும். பாஜக அதிமுகவை கைப்பற்றிவிடும் என்று கூறிய திமுகவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றே நான் அப்படி கூறினேன். மற்றபடி எங்கள் கூட்டணி ஆனால் வலுவாக உள்ளது. இந்த கூட்டணிக்கு எந்த சிக்கலும் வரவே வராது, என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார் .












Click it and Unblock the Notifications