அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு.. தீர்ந்தது குழப்பம்.. ஆசிரியர்களுக்கு குஷி.. அன்பில் மகேஷ் அதிரடி
அன்பில் மகேஷ் எமிஸ் முறை குறித்து விளக்கம் தந்துள்ளார்
சென்னை: கடந்த சில நாட்களாகவே பள்ளிக்கல்வி துறையில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திற்கும், சந்தேகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெளிவான பதிலை இன்று அளித்துள்ளார்.
நாளுக்குநாள் தமிழக பள்ளிக்கல்வி துறையில் எத்தனையோ அதிரடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமானது எமிஸ்
மாணவ, மாணவியரின் பெயர், முகவரி, வருகை பதிவு, சாதி, பாலின விகிதம், இதர தனிப்பட்ட தரவு, தேர்வுப் பதிவுகள், உடல்நலம் உள்ளிட்ட தரவுகளையும் ஆன்லைனில் பதிவு செய்யும் முறைக்கு எமிஸ் என்று பெயர்...

எமிஸ்
கல்வி மேலாண்மைத் தகவல் மையம் (Education management information system) எனப்படும் இந்த வெப்சைட்டில் மாணவ, மாணவியரின் பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது.. அதாவது, மாணவ, மாணவியரின் வருகைப் பதிவினையும் 'எமிஸ்' மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கல்விப்பணி
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அன்றாடம் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில், இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதனால் ஆசிரியர்களின் முக்கியமான பணியான கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவ, மாணவியரின் வருகைப் பதிவினை பதிவு செய்யவே பாதி நாள் போய்விடுகிறது என்றும், மீதி இருக்கின்ற பாதி நாளில் என்ன செய்வது என்று புரியாமல் ஆசிரியர்கள் திகைத்துக் கொண்டிருப்பதாகவும் இது தொடர்பான விமர்சனங்களும் வெளிவந்தன.

ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "மாணவ, மாணவியரின் உணவு விவரங்கள், சுகாதாரத் தகவல்கள், பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்களை எல்லாம் 'எமிஸ்' மூலம் பதிவு செய்யச் சொல்லுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண் குழந்தைகள் தங்களின் இயற்கை சார்ந்த விவரங்களை தங்கள் தாயிடமோ அல்லது பெண் மருத்துவரிடமோ சொல்வார்களே தவிர, ஆசிரியர்களிடம் சொல்லத் தயங்குவார்கள்.

பெண் குழந்தைகள்
இது குறித்து ஆசிரியர்கள், குறிப்பாக ஆண் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் விவரங்களை கேட்பது என்பதோ அல்லது அவர்களிடம் பெண் குழந்தைகள் சொல்வது என்பதோ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல. இந்த விவரங்களை மாணவர்கள் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. இன்னும் சொல்லப் போனால், சக மாணவிகளே இதுபோன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொடர்புடையோரை அழைத்துப் பேசி பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்கள் கேட்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கூடுதல் சுமை
மாணவ, மாணவியருக்கு கல்வி போதிப்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியர்களின் கூடுதல் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில், இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் தந்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

விளக்கம்
"எமிஸ் டிஜிட்டல் பதிவு முறையின்போது, இப்போதைக்கு நெட்ஒர்க் பிரச்சினைகள் ஒரு சில இடங்களில் இருக்கலாம்... ஆனால், எமில் ஆப் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கு அதிக நேரம் வீணாகாது.. வகுப்புக்கு வந்துள்ள மாணவர்களை தவிர வராத மாணவர்களுக்கு ஆப்சன்ட் என்பதை கிளிக் செய்து கொள்ளலாம். அதேபோல, எமிஸில் மாணவர்களின் சாதியை பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அவர்கள் கட்டாயம் சாதியை சொல்லித்தான் ஆக வேண்டும் என்பதில்லை...

சலுகைகள்
விருப்பம் இருப்பவர்கள் மட்டும் சாதியை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம்... விருப்பமில்லாத பட்சத்தில் எனக்கு விருப்பமில்லை என்பதை ஆசிரியரிடமே தயங்காமல் சொல்லிவிடலாம்.. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அவர்களது சலுகைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு ஜனநாயக உரிமை உள்ளது. அதை செய்ய வேண்டிய கடமை அரசுக்கும் உள்ளது. அதனால்தான் சாதி பதிவு செய்யப்படுகிறது... அதுவும், சாதி பெயர் கேட்கப்படுவதில்லை, வகுப்புதான் கேட்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications