காமெடி சேனல் பார்ப்பது போலத்தான்.. பாஜக-அதிமுக கூட்டணி குறித்த கேள்வியால் கலாய்த்து தள்ளிய உதயநிதி!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி பிளவுப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு சிரித்தபடி ‛காமெடி பீஸ்கள்' என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர்2 கட்சிகளையும் கலாய்த்து வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி அருகே அமர வைக்கப்பட்டார். இதையடுத்து பாஜக, அதிமுக கூட்டணி என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியானதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தான் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய கருத்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா, முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார். இந்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், ‛அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக தேர்தல் வேளையில் தான் அறிவிக்கப்படும். இது எனது தனிப்பட்ட கருத்து இல்லை. இது அதிமுகவின் கருத்து' என்றார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வரை எதுவும் சொல்லவில்லை. இதனால் டி ஜெயக்குமார் கூறியது அதிமுகவின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் தமிழகத்தில் பாஜகவை, அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுள்ளது. இதற்கிடையே தான் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த பாஜக நாளை தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பிளவு குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‛‛இதுபற்றி அவர்களே கூறிவிட்டனர். இது ஒரு நாடகம் தான். காமெடி போன்றது. எல்லாமே காமெடி பீஸ்கள் தான். அது உட்கட்சி பூசல் தான்'' என்றார்.
இந்த வேளையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி எதுவும் பேசவில்லையே? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‛‛அவர்(எடப்பாடி பழனிச்சாமி) எதுவும் பேசமாட்டார். நான் தொடர்ந்து சொல்லி கொண்டிருக்கிறேன். இது உட்கட்சி பிரச்சனை. அவர்கள் சண்டைப்போடுவது போல் நடிப்பார்கள். இன்று கூட பாருங்கள் யாரும் வெளிப்படையாக பேச வேண்டாம் என கூறியுள்ளனர். எல்லாம் சும்மா தான். காமெடி சேனல் பார்க்கிறோம் அல்லவா. அதுபோல் அவர்களை பார்த்துவிட்டு போக வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications