உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்களுடன்.. பனையூர் சந்திப்பில் விஜய் பேசியது என்ன? வெளியான தகவல்
சென்னை : ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை (25.10.21) அன்று நடிகர் விஜய் நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். இது"பதவி"அல்ல"பொறுப்பு"என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு அன்போடு கேட்டுகொண்டார் என புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, விழுப்பரம், கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் முதல்முறையாக தேர்தல் களத்தை சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில் 129 பேர் வெற்றி பெற்றனர்.

129 பேர் வென்றனர்
வெற்றி பெற்ற 129 பேரும் கடந்த 25-ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் அப்போது வெளியிட்டிருந்த அறிக்கையில் எந்தந்த மாவட்டங்களில் எத்தனை பேர் வென்றார்கள், யார் யார் எங்கு வென்றார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டிருந்தது.

அடிப்படை பிரச்சனை
மேலும் வெற்றி பெற்ற அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை விஜய் அவர்களின் உத்தரவின் படி செவ்வனே செயல்படுத்தி மக்கள் பணியினை தொடர்வார்கள் என்று விஜய் மக்கள் இயக்ம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்ன பேசினார்
தன்னை சந்தித்த அனைவரையும் விஜய் தனித்தனியாக அழைத்து பாராட்டியதுடன் அவர்களுடன் இணைந்து குரூப் போட்டோ ஒன்றும் அப்போது எடுத்துக்கொண்டார். ஆனால், வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரிடம் விஜய் என்ன பேசினார் என்பது இதுவரை வெளியே தெரியாமல் இருந்து வந்தது .

விஜய் வாழ்த்து
இந்நிலையில் வெற்றி பெற்ற 129 பேரிடம் நடிகர் விஜய் என்ன குறித்து, விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களை (25.10.21) அன்று நடிகர் விஜய் நேரில் சந்தித்து தன் வாழ்த்துகளை தெரிவித்தார். இது"பதவி"அல்ல"பொறுப்பு" என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்குமாறு அன்போடு கேட்டுகொண்டார் என புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியல்
நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார்.விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இலக்கு நோக்கி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் நேரடியாக களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications