வேளாண் பட்ஜெட்டில் நீங்க எதிர்பார்ப்பது என்ன? அரசுக்கு தெரிவிக்க 4 வழிகள்! முழு விவரம் இதோ!
வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வர வேண்டும் என மக்கள் அரசுக்கு தெரிவிக்க 4 வழிமுறைகள்.
சென்னை: 2023-24 ஆம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார்.
கடந்த இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகளைப் போன்று, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்களை சேர்ப்பது தொடர்பாக அதில் பேசப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

வேளாண் நிதிநிலை அறிக்கை
உழவர் நலனைப் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையினை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர், விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

10 மாவட்டங்களில்
இதுவரை 10 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு நிறைவடைந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரைக்கேற்ப, திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக்கூட்டம் 22.01.2023 அன்று திண்டுக்கல்லிலும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கான கருத்துக் கேட்புக்கூட்டம் 24.01.2023 அன்று திருநெல்வேலியிலும் வேளாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும்
இக்கூட்டத்தில் 10 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், விஞ்ஞானிக் விவசாயச் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். இதுபோன்று, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், கருத்துக்கேட்புக்கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன.

காணொலிக் காட்சி
இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்து கருத்துக்களை வேளாண்மை (ம) உழவர் நலத்துறை பெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன.

தலைமைச் செயலாளர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட முன்னேற்றங்களின் அடிப்படையிலும், விவசாயிகளின் தேவையினைக் கருத்தில் கொண்டும், எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய கொள்கைகள், புதிய திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

கருத்துக் கேட்புக்கூட்டங்கள்
இக்கூட்டங்களில், உழவர் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், கருத்துக் கேட்புக்கூட்டங்கள், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாட்கள், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள், அதனை செயல்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி 2023-24 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையினை அனைத்து துறை அலுவலர்களும் கலந்தாலோசித்து தயாரிக்குமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

பல வழிகள்
இதுவரை 810க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளிடமிருந்து வரப்பெற்றுள்ளன. மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை விரைவில் பெறுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. எனவே, இதுவரை அரசுக்கு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம்.

பல்வேறு வழிவகைகள்
1.உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.
2.கடிதம் மூலம் தெரிவிப்பதற்கான முகவரி:
வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர்,
வேளாண்மை (ம) உழவர் நலத்துறை,
தலைமைச் செயலகம்,
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600 009.
3.மின்னஞ்சல் முகவரி [email protected]
4.வாட்ச் ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி 9363440360

அரசுக்கு தெரிவிக்கலாம்
கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றே, எதிர்வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள கருத்துக் கேட்பு ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு, வேளாண்மையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்குமாறு வேளாண் உற்பத்தி ஆணையர் (ம) அரசுச் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications