பத்திரப்பதிவு அக்கப்போரு.. முதலில் விஏஓ, அடுத்து ரிஜிஸ்ட்ரார், இப்ப எழுத்தர்.. தமிழக அரசின் அதிரடி
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் லஞ்ச விவகாரத்தில் அரசு அதிகாரிகள் கைதாகி வருவது, மிகப்பெரிய அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினமும் ஒரே நாளில் நான்கைந்து அரசு அதிகாரிகள் கைதாகியிருக்கிறார்கள்.
தமிழகத்தில், பட்டா, பத்திரப்பதிவு போன்ற விவகாரங்களில் லஞ்ச நடமாட்டம் பெருகியபடியே காணப்படுகிறது.. இதை தடுப்பதற்காகவே தமிழக அரசு ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, இதற்கெல்லாம் கடிவாளங்களை போட்டு வருகிறது.

எனினும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது. அதிலும் பெண் அதிகாரிகளே, லஞ்சம் வாங்கி நாளுக்கு நாள் கைதாகி வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. ஒவ்வொருமுறையும் லஞ்சம் வாங்கி இவர்கள் கைதாவது மீடியாக்களில் அம்பலமானாலும், அடுத்தடுத்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள். தொடர்ந்து கைதாகி கொண்டுதான் வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் கோளாந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அற்புதம்.. இவர் ராணுவத்தில் பணி புரிகிறார். தற்சமயம் அந்தமானில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015ல் சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடி சாலையில் 3 வீட்டுமனைகள் வாங்கினார்.
வீட்டு மனை பத்திரம்: இந்த மனைகளை அவர் சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் உள்ள சார்பதிவாளர் (1) அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தார். அப்போது 3 மனைகளுக்கு பதில் 2 மனைகளை மட்டும் பதிவு செய்திருக்கிறார். 3 இடத்திற்கும் பட்டா வாங்க விண்ணப்பித்தபோதுதான், இந்த விஷயம் தெரியவந்தது.
எனவே, திருத்த பத்திரம் பதிவு செய்வதற்காக, சிவகங்கை சார்பதிவாளர் அலுவலகம் எதிரேயிருக்கும் பத்திர எழுத்தர் கண்ணனை அணுகியுள்ளார். அவர் சார்பதிவாளர் ஈஸ்வரனுக்கு ரூ.18 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்த புகார் தரவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டில் ரசாயன பவுடர் தடவிய ரூ.18 ஆயிரத்தை கண்ணனிடம் அற்புதம் கொடுத்தார். அப்போது எழுத்தர் கண்ணன், சார்பதிவாளர் ஈஸ்வரன்2 பேரையுமே அலேக்காக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூக்கி கைது செய்தனர்.
வி.ஏ.ஓ. கைது: திருச்சி மாவட்டம் தாளக்குடியை சேர்ந்த ரத்தினகுமாரின் மனைவி தேவி. தன்னுடைய தந்தையின் பெயரிலுள்ள சொத்துக்களை விற்பதற்காக வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22ம்தேதி ரத்தினகுமார் விண்ணப்பித்தார். அப்போது சோமரசம்பேட்டையை சேர்ந்த விஏஓ செந்தில்குமார், ரூ.3000 லஞ்சம் கேட்டாராம். இவரையும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்ததுடன், அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.4 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல திருவாரூர் வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியல், இணை ஆணையர் அருணபாரதியிடமிருந்து ரூ.500 நோட்டுகள் ரூ.1.43 லட்சம் கைப்பற்றப்பட்டது...
அதிகாரிகள் கைது: விசாரணையில், அவருக்கு கீழ் இயங்கி வரும் தாலுகா வணிகவரி அலுவலகங்கள் மற்றும் ஆண்டொன்றுக்கு ரூ.40 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்களிலிருந்து, வார வாரம் லட்சக்கணக்கில் லஞ்சம் கை மாறியது தெரியவந்துள்ளது. ஒரேநாளில் அரசு அதிகாரிகள் இப்படி லஞ்சம் வாங்கி கைதாவது மிகப்பெரிய அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்திவருகிறது.












Click it and Unblock the Notifications