சென்னையில் கல்யாண வீடாக இருக்க வேண்டிய சப் இன்ஸ்பெக்டர் வீடு.. மகள் சொன்ன வார்த்தை.. இப்படியா ஆகணும்
சென்னை: சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகரைச் சேர்ந்த ஆனந்தன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தனின் மூத்த மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் அவரது மகளுக்கு விருப்பம் இல்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவர் திடீரென தவறான முடிவெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கண்ட சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன்.. எடுத்த முடிவு உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள்... ஆனால் உண்மையில் திருமணம் என்பது பெரியவர்களால் பெரும்பாலும் நிச்சயிக்கப்படுகிறது. சிலரது திருமணத்தை அவர்களே தீர்மானித்து கொள்கிறார்கள்.சிலருக்கு சூழ்நிலை தீர்மானிக்கிறது. சிலருக்கு பெற்றோர் பார்க்கும் வரன்பிடிக்காமல் போகலாம். அப்படியான ஒருசூழலில் சப் இன்ஸ்பெக்டர் குடும்பத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன்
சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு, தணிகாசலம் நகரைச் சேர்ந்த 55 வயதாகும் ஆனந்தன் என்பவர், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இவருக்கு சரளா என்ற மனைவியும், 24 மற்றும் 19 வயதுகளில் 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகள் எம்.பி.ஏ. படித்து முடித்துள்ளார். அத்துடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 2-வது மகள், பெருங்களத்தூரில் உள்ள பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
நீண்ட நேரமாக வரவில்லை
கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி மதியம் எஸ்ஐ ஆனந்தன், கொளத்தூர் அடுத்த வெற்றி நகரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டு தூங்கியுள்ளார். மாலை நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்கவே இல்லை என்று கூறப்படுகிறது.
தவறான முடிவு
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கு ஆனந்தன், மின்விசிறியில் வேட்டியால் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திரு.வி.க.நகர் போலீசார், ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமண நிச்சயதார்த்தம்
இதுபற்றி கொளத்தூரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தனின் மூத்த மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்ததது தெரியவந்தது. ஆனால் இந்த திருமணத்தில் அவரது மகளுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. அவர் திருமணத்துக்கு மறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றார். அவர் தற்போதுவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த மனவேதனையில் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது முடிவுக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications