'லிப்டில்' இளம் பெண் யூடியூபர்.. பின்னாடியே போன இளைஞர்.. சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரெயில் நிலையத்தின் 'லிப்டில்' சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் யூடியூப் பிரபலத்தை கண்ட இடத்தில் சீண்டிய வட மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 'யூடியூப்பில்' மிகவும் பிரபலமாக இருக்கிறார். அவர், ஓட்டல், ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து தனது 'யூடியூப்' பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த பெண், அண்மையில் சொந்த வேலை காரணமாக சென்னை பாரிஸ் கார்னருக்கு வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு சென்னை ஏர்போர்ட் செல்ல விரும்பினார்.

அதற்காக மெட்ரோ ரயிலில் ஏறி மீனம்பாக்கம் விமான நிலையம் செல்ல முடிவு செய்தார். சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அந்த பெண் யூடியூப் பிரபலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 'லிப்டில்' ஏறினார். அவருடன் வாலிபர் ஒருவரும் உடன் ஏறினார்.
இதனிடையே 'லிப்டில்' சென்று கொண்டிருக்கும்போதே, அந்த வடமாநில வாலிபர், தனியாக நின்ற யூடியூப் பிரபலமான இளம்பெண்ணிடம் திடீரென பாலியல் தொல்லையில் ஈடுபட்டாராம். அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கு கத்தி கூச்சலிட்டார். அதற்குள் 'லிப்ட்' நின்றதும், அந்த வாலிபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியிருக்கிறார்.
இதுபற்றி அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்ற அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து மெட்ரோ நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
பின்னர் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதாகும் அசோக் குமார் என்பதும், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது. அசோக்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications