விஜய்யை விளாசிய நீதிமன்றம்.. பொறுமையாக காய் நகர்த்தும் போலீஸ்! திமுகவின் மாஸ்டர் பிளான்
சென்னை: "என்ன மாதிரியான கட்சி இது? தலைமைப்பண்பே இல்லை. கூட்டத்தில் உயிரிழந்தவர்களை விட்டுவிட்டு விஜய் ஓடியிருக்கிறார். காவல்துறை ஏன் அமைதி காக்கிறது?" என்றெல்லாம் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியிருந்தது. இருப்பினும் விஜய் மீது தமிழக அரசு தற்போது வரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஏன் விஜய்யை போலீஸ் கைது செய்யவில்லை? அப்படி கைது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
கடந்த 27ம் தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் அவர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் சென்னையில் தனது வீட்டிலிருந்தே 8.45க்குதான் கிளம்பியிருந்தார். எனவே நாமக்கல் வர தாமதமாகிவிட்டது. விஜய்க்காக அதிகாலை முதல் காத்திருந்த ரசிகர்கள், தொண்டர்கள் வெயில் ஏற ஏற ஒவ்வொருவராக மயக்கம் போட்டு கீழே விழ தொடங்கினர்.

நாமக்கல்லிலும் பாதிப்பு
விஜய் வந்து பேசும்போது பலரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். நாமக்கல்லில் இப்படியெனில், கரூரில் விஜய் 7 மணி நேரம் தாமதமாக பேச வந்தார். மதியம் 12 மணிக்கு வருவார் என்று கட்சி தலைமை ட்விட்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மாலை 7 மணிக்குதான் வந்தார். அவருக்காக வழக்கம்போல காத்திருந்த தொண்டர்கள், ரசிகர்கள் அடுத்தடுத்து மயங்க, கரூரிலும் நிலைமை மோசமடைந்தது. விஜய்யை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என ஏங்கியிருந்த கூட்டம் முந்தியடிக்க, நெரிசல் ஏற்பட்டு அது பேரழிவாக மாறி 41 பேரை கொன்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக தவெக கட்சியை விமர்சித்திருந்தது. "கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வேதனை அளிக்கின்றன. இந்த வழக்கில் இரண்டு பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு நடவடிக்கை என்ன எடுக்கப்பட்டது? அனைத்தையும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது" என்று நீதிமன்றம் சரமாரியாக விமர்சித்திருந்தது.
நீதிமன்றம் கேள்வி
இருப்பினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின்னர் விஜய்யின் வேன் ஓட்டுநர் மீது மட்டுமே காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. விஜய் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கூட, ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை? ஏன் கைது செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனாலும் அரசு மௌனமாக இருந்தது. தேவையெனில், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் எனில் விஜய் கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். மற்றபடி இந்த விஷயத்தை திமுக பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஆபத்தான விஷயங்கள்
அப்படி இருப்பது நல்லதுதான். ஒருவேளை விஜய் கைது செய்யப்பட்டிருந்தால், அவரது ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கவே முடியாது. ஒரு அரசியல் கூட்டத்திற்கு எப்படி வர வேண்டும், கூட்டத்தில் எப்படி இருக்க வேண்டும், பொது சொத்துக்களை பாதுகாப்பது எப்படி? சுய ஒழுக்கம் என எதையுமே எதிர்பார்க்க முடியாத கூட்டமாகத்தான் விஜய்யின் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஒருவேளை விஜய் கைது செய்யப்பட்டால், அதற்கு எதிராக போராட்டம் என்கிற பெயரில் இந்த ரசிகர் கூட்டம் செய்யும் விஷயங்கள் அனைத்தும் ஆபத்தாகத்தான் இருந்திருக்கும்.
நீதிமன்றத்தின் வழி
ஏனெனில் இவர்களை வழிநடத்த தற்போது புஸ்ஸி ஆனந்தோ, சி.டி.நிர்மல்குமாரோ, ஆதவ் அர்ஜுனாவோ இல்லை. எனவே போராட்டங்கள் என்கிற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தங்களை தாங்களே வருத்திக்கொள்ளுதல் ஆகியவை நடந்திருக்கும். இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை அதிகரித்து தமிழக அரசுக்கு தலைவலியைத்தான் கொடுத்திருக்கும். எனவேதான் நீதிமன்றத்தின் வழி அரசு சென்றுக்கொண்டிருக்கிறது.
சுத்தலில் விட்ட போலீஸ்
அதற்காக இந்த கூட்டத்தை அப்படியே விட்டுவிடவும் இல்லை. வெளியில் வந்தால் கைது, அதற்காக நாங்களாக உங்களை தேடி வந்தும் கைது செய்ய மாட்டோம் என புஸ்ஸி ஆனந்த், ஆதவ் மற்றும் நிர்மல் குமார் விஷயத்தில் போலீஸ் கொஞ்சம் தாராளமாக நடந்துக்கொள்கிறது. அவர்களால் வெளியிலும் வர முடியாமல், முழுமையாக தலைமறைவாகவும் இருக்க முடியாமல் தவிக்கிறார்கள். போலீசார் அவர்களை சுத்தலில் விட்டிருக்கிறது என விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications