ரஜினி பாஜக பக்கம் சாய்ந்து விட்டார்.. அப்ப அதிமுக கதி??
ரஜினி பாஜக பக்கம் போய்விட்டால் அதிமுக நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
சென்னை: பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற ரேஞ்சுக்கு ரஜினி பேட்டி கொடுத்துவிட்ட நிலையில், அதிமுக நிலைப்பாடு இனி என்னாகும் என்று நிலை தெரியவில்லை.
எப்போதுமே ரஜினி, கமலை சீண்டி வந்து கொண்டிருக்கிறது அதிமுக. இருவரையுமே எதிலயும் விட்டு வைப்பதில்லை. நமது அம்மா நாளிதழிலிருந்து அமைச்சர்கள் தரும் பேட்டி வரை எல்லாமே இருவரையும் கடுமையாக விமர்சித்தே இருக்கும்.
ஒருமுறை அமைச்சர் சி.வி. சண்முகம், , 'கன்னடரான ரஜினி, காவிரியைக் கொண்டு வர என்ன திட்டம் வைத்திருக்கிறார்?' என கேள்வி எழுப்பினார். அமைச்சர் ஜெயகுமாரோ, 'காலா பாடல்கள் போராட்டத்தை தூண்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இப்போது பாஜகவும் - அதிமுகவும் இணக்கத்துடன்தான் இருந்து வருகிறார்கள். அதை விட ஒரு படி மேலே போய் இன்று ரஜினி, மோடியை ஒரே தூக்காக தூக்கி மேலே வைத்து விட்டார். ரஜினி பாஜகவுக்கு சப்போர்ட் என்றால் அப்போ அதிமுக????
[ஜெயலலிதாவிற்காக வடிவமைக்கப்பட்ட புதிய சிலை.. அதிமுக அலுவலகத்தில் இன்று திறக்கப்படுகிறது!]

முரசொலி கட்டுரை
மறுபக்கம், இதுவரை திமுக தலைமை இன்னமும் ரஜினியை பகிரங்கமாக விமர்சிக்கவே இல்லை. ஒரு வித தயக்கத்துடன்தான் ஒதுங்கியே இருந்தது. ரஜினியின் கட்சி குறித்த அறிவிப்பு முதலில் வரட்டும் என்றுகூட திமுக தயங்கியிருக்கலாம். இடையில் வந்த முரசொலி கட்டுரை ஒரு பெரிய ஷாக்தான். இப்போது பகிரங்கமாக பாஜக முத்திரை தெரிவதால், இனி திமுக தரப்பிலும் ரஜினிக்கு பலமான எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிகிறது.

கராத்தே தியாகராஜன்
இது போதாதென்று, கராத்தே தியாகராஜன் ஸ்டாலின் - ரஜினி தலைமையில் இரு அணிகள் அமையும் என்று சொல்லி விட்டு போனார். அவர் ஏன் அப்படி சொன்னார் என இப்போது வரை விளங்கவே இல்லை. ஆனால் இப்போது விளங்க ஆரம்பித்து விட்டது. அவர் சொன்னதன் உண்மையான அர்த்தம் இதுவாகத்தான் இருக்க முடியும்- மு.க.ஸ்டாலின் தலைமையிலான மெகா கூட்டணி. இன்னொன்று ரஜினி தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி. இதுதான் நடக்கப் போகிறது.

3 "தி"க்கள் நிலை?
திமுக மட்டும் இல்லை, அடிக்கடி தனித்தனியாக வந்து சந்தித்து விட்டு போன மூன்று "தி"க்களான திருநாவுக்கரசர், தினகரன், திருமாவளவன் இவர்களின் நிலைப்பாடும் இனி கஷ்டம்தான். ரஜினியை எதற்காக சந்தித்துவிட்டு வந்தீர்கள் என்றால், ரொம்ப நாள் பழக்கம், நட்பு, நெருக்கம் என காரணங்களை சொன்னார்கள். ஆனால் இவர்களுடனான அரசியல் நிலைப்பாடும் என்னாகும் என தெரியவில்லை.

என்ன செய்தார்?
ஏற்கனவே உச்சாணி கொம்பில் அன்றிலிருந்து தூக்கி வைத்த தமிழக மக்களுக்கு ரஜினி இதுவரை எந்த நல்லதையும் செய்தது இல்லை. ஆனால் தமிழகத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடித்து வரும் மத்திய அரசுக்கு ஆதரவாக இறங்க போவது இன்னும் தமிழர்களின் வயிற்றில் புளியைதான் கரைக்கிறது. காவிரிக்கு 1 கோடி ரூபாய் தரேன் என்று சொன்னதே 'பஞ்ச்' டயலாக்காய் போய்விட்ட நிலையில், இனி முழு நேர அரசியலில் இறங்கி என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை.

ரசிகர்களின் நிலை?
தமிழக மக்களின் மனதில் கடும் வெறுப்புகளைச் சம்பாதித்து வைத்துள்ள பாஜகவை பலம் வாய்ந்த கட்சியாக கூறி விட்டார் ரஜினி. இதை தமிழக வாக்காளர்கள் எப்படி ரசிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ரசிகர்கள் எப்படி வாக்காளர்களாக மாற போகிறார்கள் என்றும் புரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications