அந்த ஒரு சம்பவம்! சீமான் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணி.. சென்னை போலீஸை டார்க்கெட் செய்வது ஏன்?
சென்னை: சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதை இப்போது பார்ப்போம். இந்த விவகாரத்தில் சென்னை போலீஸை டார்க்கெட் செய்வது ஏன் என்பதை இப்போது பார்ப்போம்.
சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு சென்னை போலீஸ் தான் காரணம் என சிலர் சமூக ஊடகங்களில் தகவல்களை பரப்பிவிட்டனர். இது உண்மையாக இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு அந்த செய்தி வேகமாக பரவியது. இதனிடையே முதல்வர் ஸ்டாலினே சீமான் கணக்கு முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட் பதிவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்! என்றார்.
இந்த சூழலில் சீமான் கணக்கு முடக்கப்பட்டதற்கு சென்னை மாநகர காவல் ஆணையரை தொடர்புபடுத்தி சிலர் கொளுத்திப் போட்டனர். முதல்வருக்கே தெரியாமல் சீமானின் கணக்கை சென்னை காவல்துறை முடக்கிவிட்டதாகவும் சிலர் தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை போலீசுக்கு எதிராக அடுத்தடுத்து பதிவுகள் வெளியானது. இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கும் சென்னை காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியது. சீமான் கணக்கு முடக்கத்திற்கு சென்னை போலீஸ் காரணம் என அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சீமானின் கணக்கு முடக்கப்பட்டதற்கு பின்னணி என்ற என்று விசாரித்த போது, இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது, அவர்களுடைய புகைப்படங்களை வைத்துக்கொள்வது போன்றவை ட்விட்டரில் விதிமீறல்ஆகும். அதன்படியே சீமான், திருமுருகன் காந்தி மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,
அண்மையில் மே18ம் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சியை சீமான் நடத்தினார். இதுதொடர்பான பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டிருந்தார். இதன்பிறகே சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே மே 18 நிகழ்ச்சி தொடர்பான படங்களுக்காக ட்விட்டர் அதனை தடை செய்திருக்கலாம் என்கிறார்கள். அதேநேரம் மத்திய அரசின் உத்தரவின் பேரில் தால் தடை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications