திமுகவில் ஆரம்பிச்சாச்சு.. சென்னையில் வெடித்து கிளம்பிய "மல்லுக்கட்டு".. 15 மண்டலங்களிலும் பரபரப்பு
சேர்மன் பதவியை பிடிக்க சென்னை கவுன்சிலர்களிடையே கடும் போட்டி எழுந்துள்ளது
சென்னை: மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களது முதல் பேச்சை மாநகராட்சிகளில் ஒலிக்க தொடங்கி உள்ளனர்.. ஆனால், அதற்குள்ளாகவே சென்னை மாநகராட்சி மண்டலங்களில் மல்லுக்கட்டு ஆரம்பமாகி உள்ளது...!
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
சென்னை பெருநகர மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கின்றன. திமுக கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியது..

பிரியா
அதன்படி, சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த 28 வயதான பிரியா பொறுப்பேற்றார்... 3வது முறையாக, சென்னை மாநகராட்சி மேயர் பதவியை, ஒரு பெண் பொறுப்பேற்றுள்ளார்.. முதல் பட்டியலின பெண் மேயராகவும் பிரியா பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.. மகேஷ்குமார் துணை மேயராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் மாநகராட்சியின் மண்டல குழு சேர்மன் பதவிகளைக் கைப்பற்ற பெண் கவுன்சிலர்களிடையே மல்லுக்கட்டு அதிகரித்துள்ளது.

மாநகராட்சி மண்டலங்கள்
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், தேனாம்பேட்டை மண்டலத்தில் அடங்கிய 18 வார்டுகளில் 13 வார்டுகளில் பெண்கள் வெற்றிப்பெற்றுள்ளனர். அதேபோல, திரு.வி.க.நகர் மண்டலத்திலுள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளிலும், தண்டையார்பேட்டை மண்டலத்திலுள்ள 15 வார்டுகளில் 10 வார்டுகளிலும் பெண்களே வெற்றிப் பெற்றுள்ளனர். பெண் கவுன்சிலர்கள் அதிகமுள்ள இந்த மண்டலங்களின் சேர்மன் பதவியை பெண்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என பெண் கவுன்சிலர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

பெண் கவுன்சிலர்கள்
ஆனால், மண்டலங்களில் பெண்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என ஆண் கவுன்சிலர்கள் வரிந்து கட்டுவதால் சேர்மன் பதவியை கைப்பற்ற கவுன்சிலர்களின் மல்லுக்கட்டு ஜோராக திமுகவில் வெடித்துக்கொண்டிருக்கிறது இது ஒருபுறமிருக்க, சென்னை மாநகராட்சியின் ஆளும் கட்சி தலைவர் பதவியைப் பிடிக்க, துணை மேயர் ரேசில் இருந்து அப்பதவிக் கிடைக்காத திமுக ஜாம்பவான்கள் பலரும் பகீரத முயற்சியில் குதித்துள்ளனர்.

அடுத்த சிக்கல்
இப்போதுதான் மேயர் தேர்தலன்று, திமுக கூட்டணியில் ஒரு பஞ்சாயத்து வெடித்து, அதை முதல்வர் தலையிட்டு தீர்த்து வைத்தார்.. இப்போது இன்னொரு குடுமிப்பிடி சண்டை திமுகவுக்குள்ளேயே அதுவும் சென்னை மாநகராட்சிக்குள்ளேயே வெடிக்க ஆரம்பித்துள்ளது.. இதுபோன்ற சிலரால் கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், சில முக்கிய முடிவுகளையும் மாநகராட்சி கையில் எடுக்க யோசித்து வருகிறது.

சிறப்பு பயிற்சி
தேர்வு செய்யப்பட்டுள்ள 200 வார்டு கவுன்சிலர்கள், மன்றம், மாமன்றம் கூட்டத்தில் பேசுவது, அவர்களின் பணிகள் என்னென்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதேநேரம், பெண் கவுன்சிலர்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தை தவிர்த்து மக்களிடம் நற்பெயர் பெறுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.. காரணம், சில கவுன்சிலர்கள் பதவியேற்பின்போது, உறுதிமொழி ஏற்பதிலேயே தடுமாறினர். இது விமர்சனத்தையும் ஆங்காங்கே ஏற்படுத்தியிருந்தது..

குடுமிப்பிடி சண்டை
எனவே, இதனால், கவுன்சிலர் என்பவர் யார், அவர்களுக்கான பணிகள் என்னென்ன என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையில், 200 கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி சிறப்பு பயிற்சி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் அதற்கு முன்பாகவே, சென்னையில் குடுமிப்பிடி சண்டை ஆரம்பமாகிவிட்டது..!












Click it and Unblock the Notifications