இங்கும் அங்கும் பறக்கும் போன்கள்.. செந்தில் பாலாஜி ரெய்டு.. அதிர்ந்த கோட்டை.. ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டு கையை மீறி சென்றுள்ளது. இதனால் கோட்டை வட்டாரத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது.
அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடக்கிறது.

5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர்.
கோட்டை ரெய்டு: செந்தில் பாலாஜி வீடுகளில் மட்டும் ரெய்டு நடத்தியது போதாது என்று தற்போது தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
தலைமைச் செயலக அறையில் சோதனை செய்து வருகின்றனர். அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் அலுவலகத்திற்கு இந்தியன் வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
போன் கால்கள்: ஜெயலலிதா இறந்த பின் சென்னையில் அதிமுகவினர் வீடுகளில் நடந்த ரெய்டில்.. தலைமை செயலக ரெய்டும் முக்கியம் ஆனது. அதன்பின் மீண்டும் தலைமை செயலகத்தில் ரெய்டு நடக்கிறது.

இதையடுத்து தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். நிலைமை எப்படி இருக்கிறது, என்னென்னெ அறைகளில் சோதனை நடக்கிறது. விதி மீறல்கள் செய்யப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் போனில் ஆலோசனை செய்து உள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறார். அதோடு அதிகாரிகளும் மாறி மாறி தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு போன் செய்து இந்த விவகாரம் குறித்து மாற்றி மாற்றி பேசினார்.
இதனால் அங்கும், இங்கும் போன் கால்கள் பறந்து உள்ளன. இந்த நிலையில் இந்த ரெய்டை தடுக்க முடியாது. ரெய்டிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடலாம். தலைமை செயலாளர் தனியாக விளக்க அறிக்கை வெளியிடலாம். மற்றபடி ரெய்டை தடுக்க முடியாது என்று கூறி உள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரெய்டிற்கு எதிராக விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்? : போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஒரு மனுதாரராக இருந்தது. அதில் போக்குவரத்து முறைகேட்டில் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பவும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications