தர்ம யுத்தத்தில் தோல்வி அடைந்தார் ஓபிஎஸ்.. படார்.. இருந்த ஒரு கதவும் மூடப்பட்டது! இனி என்ன செய்வார்?
சென்னை: ஓ பன்னீர்செல்வம் அதிமுகவை மீட்க வேண்டும் என்று மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் கூறி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை தேர்தல் ஆணையம் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால் மட்டுமே எடப்பாடி பதவி செல்லும். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இதையடுத்தே எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், கர்நாடக தேர்தல் நெருங்குவதால் இதில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதில் வேட்பு மனுவை முன்மொழிந்து கையெழுத்திட வேண்டியுள்ளது.
அதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஆனால் இதில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்காமல் இருப்பதால் எங்களால் பணிகளை செய்ய முடியவில்லை.
ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவரின் வாதத்தை ஏற்க கூடாது. தேர்தல் ஆணையம் இதில் உடனே முடிவு எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று வாதம் வைத்தார்.
இதில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள்.. ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதில் 10 நாட்களில் முடிவு செய்வோம் என்று குறிப்பிட்டார்.

ஏற்றுக்கொண்டது: இதையடுத்தே இன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததால் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.
நேற்று கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட முடிவு செய்தது. தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்தது. புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது எடப்பாடிக்கு சின்னமும், பதவியும் உறுதியாகி உள்ளது.

ஓ பன்னீர்செல்வம் தோல்வி: பொதுக்குழு வழக்கு, பொதுக்குழு தீர்மான வழக்கு, சின்ன வழக்கு என்று அனைத்திலும் ஓ பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துவிட்டார்.
தற்போது தேர்தல் ஆணையம் என்ற ஒரே கதவும் பூட்டப்பட்டுவிட்டது.
தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதால் சிவில் வழக்கிலும் இனி ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமான சூழ்நிலை இருக்காது.
இனி ஓ பன்னீர்செல்வம் ஒன்று தனிக்கட்சி தொடங்கலாம். அல்லது ஓ பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் இரண்டாவது சான்ஸ் சமாதானம் பேசுவது. அதாவது ஓ பன்னீர்செல்வம் அதிமுக தரப்பில் ஏதாவது சமாதானம் செய்து. கட்சிக்குள் ஏதாவது பதவி வாங்கிக்கொண்டு மீண்டும் அதிமுகவில் இணைய முடியும். அதாவது வந்த வழியே அவர் திரும்பி செல்லலாம். ஏனென்றால் வரிசையாக பொதுக்குழு வழக்குகளில் அவர் தோல்வி அடைந்துவிட்டதால் இனி அவரால் வழக்கு ரீதியாக வெல்ல முடியாது.
அவருடன் நெருக்கமாக இருக்கும் நபர்களும் அணி மாற வாய்ப்புகள் உள்ளன. தனித்துவிடப்பட்டு அவமானப்படுவதை விட கொஞ்சம் சமாதானம் செய்து எடப்பாடி தலைமையை அவர் ஏற்றுக்கொள்வது சரியாக இருக்கும்.. ஆனால் எடப்பாடி ஓ பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொள்வாரா என்பது சந்தேகம்தான்!












Click it and Unblock the Notifications