திராவிட மாடல்.. நிதி ஒதுக்காத "ஒன்றிய" அரசு.. ஆளுநர் ரவியை அப்செட் ஆக்கிய உரையில்.. என்ன இருந்தது?
சென்னை: தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் அவையிலேயே அமர்ந்திருக்கிறார் ஆளுநர் ரவி. சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்
மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் 4ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 -23ம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது., தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது;
தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,487 கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்துதுறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழ்நாடு அரசு ஈர்த்துள்ளது
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு போதிய நிதி வழங்கவில்லை. மெட்ரோ திட்டம் 2க்கு கூட ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதை மாநில அரசு தனது நிதியில் செய்கிறது. ஒன்றிய அரசு இதே காலத்தில் பிற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது., என்று சபாநாயகர் அப்பாவு தனது உரையை வாசித்து வருகிறார். இந்த உரையில் இருந்த வார்த்தைகளை எதிர்த்தே ஆளுநர் ரவி இன்று பாதியில் உரையை நிறைவு செய்தார்.
ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் இன்று முழு உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு செய்துள்ளார்.
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரை முழுமையாக படிக்காமல் புறக்கணிப்பு செய்துள்ளார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு முழு உரையை படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications