காபியுடன் தொடர்பு.. வங்கக்கடலில் உருவான புயல்.. ‛மோக்கா’ பெயரின் அர்த்தம் தெரியுமா? சுவாரசியம்
சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‛மோக்கா' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாற உள்ளது எனவும், தமிழகத்துக்கு பாதிப்பு உண்டா? இல்லையா? என்பது பற்றியும் வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
கோடை வெயிலுக்கு நடுவே வங்கக்கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி கடந்த 8ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்ததோடு நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இதையடுத்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இன்று காலை தீவிர புயலாகவும், இரவில் அதிதீவிர புயலாகவும் மாற உள்ளது.
பொதுவாக கடலில் புயல் உருவானால் அதற்கு பெயர் சூட்டுவது வழக்கம். புயல் கடக்கும் பாதை, புயலை எளிமையாக அடையாளப்படும் வகையில் இந்த பெயர் வைக்கும் நடைமுறை உள்ளது. வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் புயல் உருவாகி வருகிறது. இந்த புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் கத்தார், இலங்கை, ஏமன், தாய்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட 13 நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது வங்ககடலில் உருவாகி உள்ள புதிய புயலுக்கு மோக்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஏமன் நாட்டின் பரிந்துரைத்த நிலையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த புயலின் பெயர் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மோக்கா என்பது ஏமன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற துறைமுகத்தின் பெயராகும்.
இந்த துறைமுகம் செங்கடல் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இந்த மோக்காவுக்கு நாம் பருகும் காபிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது முன்காலத்தில் ஏமனில் மட்டுமே காபி அரேபியா செடி வளர்க்கப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் காபி கொட்டை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது தனித்துவமான சுவையை கொண்டிருந்தது. இதனால் மோக்கா அல்லது மோச்சா பகுதியில் இருந்து காபி கொட்டையில் இருந்து தயாரிக்கும் காபி சுவையானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications