செல்லாது செல்லாது.. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. உடனே பாயிண்ட் பிடித்த ஓபிஎஸ் டீம்! பரபர ஆக்ஷன்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்றும் இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டை கொடுப்பது மோசடி என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (மார்ச் 18) காலை 10 மணி முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது.
அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவுள்ளது ஓபிஎஸ் அணி.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்
வரும் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் 18.03.2023 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு 26ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை 27-03-2023 திங்கட்கிழமை நடைபெறும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையாளர்களான நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
அதிமுக தலைமைக் கழகம், பொதுச்செயலாளர் தேர்தலை இன்று அறிவித்துள்ள நிலையில், அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.இந்த தேர்தல் அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் தான் என்றும், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வாவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, ஓபிஎஸ் அணி இந்த அறிவிப்பு செல்லாது எனத் தெரிவித்துள்ளது.

மீண்டும் கோர்ட்
ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கிறார். பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தாலும், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் இருக்கின்றன. இதனால், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் உறுப்பினர் அட்டை வழங்கி பொதுச் செயலாளர் தேர்தலை ஈபிஎஸ் தரப்பு நடத்த முடியாது என்கிறது ஓபிஎஸ் அணி. தேர்தல் அறிவிப்பையொட்டி மீண்டும் நீதிமன்றத்தை ஓபிஎஸ் அணி நாடவுள்ளதாக கூறப்படுகிறது.

செல்லாது செல்லாது
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இந்த தேர்தல் குறித்து கூறுகையில், "அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது. தேர்தல் ஆணைய பிரமாண பத்திரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என்றுதான் இன்றுவரை உள்ளது. உச்ச நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை. ஆனால், அவசர கோலத்தில் அரசியல் மோசடியை செய்ய முயற்சிக்கிறார்கள்.

அவசர கோலத்தில்
விண்ணப்பங்களை யாருக்கும் கொடுக்காமல் உறுப்பினர் அட்டை கொடுத்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளர் என கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டை கொடுப்பது மோசடி. பதவி போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் செய்கிறார்கள். நாங்கள்தான் அதிமுக என மக்கள் மத்தியில் நிரூபிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.

விதிமீறல்?
இதற்கு பதில் அளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துகிறோம். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தேர்தல் குறித்துப் பேசத் தகுதியில்லை, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது, எந்த விதிமீறலும் இல்லை, தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு அங்கீகரித்துள்ளது
இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், "அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் சுமூகமாக நடைபெறும். இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஆதரவு எங்களுக்கே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications