சர்ருனு ஏறுது தங்கம் விலை.. உண்மையில் என்ன காரணம்? எப்போது குறையும்! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வரும் நிலையில், இப்போது தங்கம் விலை எதற்காக அதிகரிக்கிறது. வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2019இல் கொரோனாவுக்கு முன்பு 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 4500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. கொரோனா பரவல் ஏற்பட்ட உடனேயே தங்கம் விலை மடமடவென அதிகரித்தது.

தங்கம் விலை இப்போது 5700 ரூபாயைத் தாண்டி சென்று விற்பனையாகிறது. வெறும் சில ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கமே ரூ.1000க்கும் மேல் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தங்கம் ஒரு கிராம் ரூ. 5730க்கு விற்பனையானது.
தங்கம்: இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எப்போதும் தங்கத்தைத் தான் வாங்குவார்கள். தங்கம் விலை நீண்ட காலத்திற்கு வைத்துப் பார்க்கும் போது தங்கம் விலை எப்போதுமே இறங்கியது இல்லை. மேலும், ஆபத்தான கலத்தில் தங்கம் தான் உதவும். ஏனென்றால் தங்கம் இருந்தால் போதும் உலகின் எந்த மூலையிலும் நாம் அதை எளிதாகப் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்தக் காரணங்களால் பொதுமக்கள் எப்போதும் தங்கத்திலேயே ஆர்வமாக முதலீடு செய்வார்கள்.
சொல்லப்போனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத் தெரிந்தே ஒரே சேமிப்பு வழியாகத் தங்கமே இருக்கிறது. இதன் காரணமாகவே தங்கத்தையும் கூட சீட் மூலம் அவர்கள் சேமிக்கிறார்கள். கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் வேலையிழந்து வருமானத்தையும் இழந்த நிலையில், அவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியது என்னவோ இந்த தங்கம் தான்.
ஆனந்த் சீனிவாசன்: பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசனும் கூட அனைத்து குடும்பத்திற்கும் குறைந்தது 400 கிராம் தங்கம் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமாளிக்கவே முடியாத ஆபத்தான காலத்தில் இந்த தங்கத்தை வைத்து நம்மால் பிழைத்துக் கொள்ள முடியும் என்பதால் தங்கத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
கடந்த சில காலமாகவே தங்கம் விலை பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமலே இருந்து வந்தது. ரூ.5400 முதல் ரூ.5700 என்ற ரேஞ்சிலேயே தங்கம் விலை கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.5700ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பதை ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.
விலை ஏற்றத்திற்கு என்ன காரணம்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "பண்டிகை காலம் முடிந்த பிறகும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரவே வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அமெரிக்காவில் பணவீக்கம் இருக்கிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைகிறது. அப்படி டாலர் மதிப்பு குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் தங்கத்தை வாங்க இது சரியான நேரம் என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார். ஏனென்றால் 18 மாதங்கள் கழித்து அமெரிக்கா வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் என்பதால் இப்போதே தங்கம் வாங்கலாம் என்று ஆனந்த் சீனிவாசன் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications