பாஜகவுக்கே ஆதரவு..அடக்கி வாசிக்கும் 'சந்திரபாபு நாயுடு'.. 'சாணக்கியராக' களமிறக்கப்பட்ட ரஜினிகாந்த்!
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென தெரிவித்த கருத்துகளின் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். அப்போது, ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது என செய்தியாளர்களிடம் கூறினார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம் வேண்டாம் என கெஞ்சினார் ரஜினிகாந்த்.

ரஜினியின் திடீர் அரசியல் வேகம்: ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நேற்று ரஜினிகாந்த் தலைகீழாக மாறி பேட்டி கொடுத்தார். ரஜினிகாந்த் தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், தமிழகம்- புதுவையில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக தலைவரான அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மத்தியில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் மோடிக்கு வாழ்த்துகள். ஆந்திரத்தில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்திருந்தார். அத்துடன் ரஜினிகாந்த் திடீரென டெல்லிக்கும் சென்றார்.
நிதிஷ்குமார் தரப்புடன் பேச்சுவார்த்தை: ரஜினிகாந்த் அரசியல் கருத்துகள், டெல்லி பயணம் தொடர்பாக நாம் விசாரித்த போது நமக்குக் கிடைத்த தகவல்கள்: லோக்சபா தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்த நிலையில் மத்தியில் தனித்து ஆட்சி அமைக்க முடியாது; சந்திரபாபு நாயுடு- நிதிஷ்குமார் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்தாக வேண்டும் என்பதை பாஜக மேலிடம் புரிந்து கொண்டுவிட்டது. நிதிஷ்குமாரை தக்க வைக்க 'மும்பை'யில் வைத்து சில பல 'புரிதல்கள்' ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன.
களமிறக்கப்பட்ட ரஜினிகாந்த்: சந்திரபாபு நாயுடுவை தக்க வைக்க மும்பை 'தொழிலதிபர்' மூலம் நடிகர் ரஜினிகாந்த் 'சாணக்கியராக' களமிறக்கப்பட்டாராம். சந்திரபாபு நாயுடுவுக்கும் ரஜினிகாந்துக்கும் மிக நெருக்கமான உறவு இருப்பதை அனைவரும் அறிவர். ஆந்திராவில் கடந்த ஆண்டு என்டிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை தீர்க்கதரிசி என்பதுடன் ஓவராகவே புகழ்ந்திருந்தார். சந்திரபாபு நாயுடுவுக்கான ரஜினிகாந்தின் தேர்தல் பிரசாரம் இது என்றும் விமர்சிக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடுவுக்காக துடிதுடித்த ரஜினி: மேலும் ஜெகன் மோகனால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோதும் ரஜினிகாந்த் துடிதுடித்துப் போனார். அப்போது, சந்திரபாபு மகன் நாரா லோகேஷுக்கு ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். அப்போது சந்திரபாபு நாயுடுவை ஜெயிலில் போய் ரஜினிகாந்த் சந்திக்கிறார் எனவும் கூறப்பட்டது. இருவருக்கும் இடையே 30 ஆண்டுகால நெருங்கிய உறவு இருக்கிறது. இதனை எல்லாம் கணக்கில் வைத்துதான் சந்திரபாபு நாயுடுவை தக்க வைக்க நடிகர் ரஜினிகாந்தை மும்பை தொழிலதிபர் மூலம் பாஜக மேலிடம் களமிறக்கியதாம்.
சந்திரபாபு நாயுடுவிடம் ரஜினி சொன்னது என்ன?: சந்திரபாபு நாயுடுவிடமும் இப்போதைக்கு எந்த பேரமும் வேண்டாம்; அது வெளியே தெரியவும் வேண்டாம்; பாஜக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருங்கள் அது போதும் என கேட்டுக் கொண்டாராம் ரஜினிகாந்த். இதனை அப்படியே ஏற்றுக் கொண்டுதான் செய்தியாளர்கள் கேட்பதற்கு முன்னரே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம் என சந்திரபாபு நாயுடு அழுத்தம் திருத்தமாகவும் கூறினாராம். பாஜக தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கு சந்திரபாபு நாயுடு இவ்வளவு திடமான ஆதரவை தருவதற்கு முழுமையான காரணமே நடிகர் ரஜினிகாந்தின் முயற்சி மட்டும்தான்.. இப்படித்தான் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்தும் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications