உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா? மீண்டும் பதிவு செய்ய முடியுமா? அதென்ன டெண்டர் ஓட்டு? முழு விபரம்!
சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, "என் ஓட்டை வேறொருவர் போட்டுவிட்டால் என்ன செய்யலாம்? மீண்டும் வாக்களிக்க முடியுமா?" என்ற சந்தேகம் பல வாக்காளர்களிடையே எழுந்துள்ளது. சமீபத்தில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மற்றொருவரின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வாக்களித்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல்களில் மற்றொருவரின் பெயரில் போலியாக வாக்களிப்பது "கள்ள ஓட்டு" எனப்படும் மிகக் கடுமையான தேர்தல் குற்றமாகும். இதுபோன்ற முறைகேடுகள் நடந்தால் நியாயமான தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதனால், இந்திய தேர்தல் ஆணையம் மட்டுமல்லாமல் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்கு செல்லும் போது, தன்னுடைய பெயரில் ஏற்கனவே ஓட்டு பதிவாகி இருப்பதாக தெரிய வந்தால், உடனடியாக அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
cVIGIL செயலி
குறிப்பாக வாக்குச்சாவடியில் இருக்கும் Returning Officer (RO) அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலர் (DEO) ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வாய்வழி தகவலை மட்டும் வழங்காமல், எழுத்து மூலம் புகார் கொடுத்தால் அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க cVIGIL செயலியும் பயன்படுத்தலாம். இந்த செயலி மூலம் சம்பவம் தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ இருந்தால் அதையும் இணைத்து, சம்பவம் நடந்த நேரம், வாக்குச்சாவடி எண், சம்பந்தப்பட்ட நபர் விவரம் போன்ற தகவல்களை பதிவேற்றி உடனடி புகார் அளிக்க முடியும்.
கள்ள ஓட்டு போடுதல்
அதேபோல், தேர்தல் உதவி எண் 1950-ஐ தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். போலி அடையாள அட்டை பயன்படுத்துதல், மிரட்டல், கூட்டமாக கள்ள ஓட்டு போடுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் உடனடியாக புகார் அளிக்கலாம். ஆள்மாறாட்டம் அல்லது போலி வாக்குப்பதிவு உறுதியாக நிரூபிக்கப்பட்டால், அந்த வாக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இது இந்தியாவில் மிகக் கடுமையான தேர்தல் குற்றமாக கருதப்படுவதால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் இந்திய குற்றச் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தண்டனை மற்றும் அபராதம்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் வழக்கின் தன்மையைப் பொறுத்து சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் சேர்த்து விதிக்கப்படுவதோடு உடனடி கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. இத்தனைக்கும் முக்கியமான கேள்வி - உண்மையான வாக்காளர் மீண்டும் வாக்களிக்க முடியுமா? என்றால், அதற்கான பதில் ஆம் என்பதே. ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்கு சென்றபோது, தனது ஓட்டு ஏற்கனவே வேறொருவரால் போடப்பட்டிருப்பதாக தெரிந்தால், அவர் தேர்தல் விதிகளின் கீழ் "Tender Vote" (டெண்டர் ஓட்டு) அளிக்கும் உரிமை பெற்றவர்.
கள்ள ஓட்டு சம்பவங்கள்
இதற்காக, வாக்காளர் தன்னுடைய அடையாள ஆவணங்களை காட்டி, வாக்குச்சாவடி அலுவலரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். பின்னர் அவருக்கு தனியாக வழங்கப்படும் வாக்குச் சீட்டு மூலம் தனது வாக்கை பதிவு செய்ய முடியும். கள்ள ஓட்டுகளைத் தடுக்கும் வகையில், தேர்தல் ஆணையம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டைகள் சரிபார்ப்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்பாடு, டிஜிட்டல் கண்காணிப்பு போன்ற முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கள்ள ஓட்டு சம்பவங்கள் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
