கூட்டுறவு மசோதா! அதிமுகவினர் பதவிகளுக்கு வேட்டு! ஸ்டாலின் மனதை மாற்றிய அந்தக் கடிதம்! பின்னணி என்ன?
சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவின் பின்னணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வந்த அந்த உருக்கமான கடிதமே காரணமாக கூறப்படுகிறது.
மறைந்த திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரின் மகன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்த வரிகள் அவரை ரொம்பவே பாதிக்கச் செய்துவிட்டதாம்.
இதனால் தான் இனியும் இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன், கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா மூலம் அதிமுகவினரின் பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டம் எனக் கூறப்படுகிறது.

கூட்டுறவு சங்கம்
அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் கடன் மோசடி நடைபெற்றிருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும், கூட்டுறவு சங்கப் பதவிகளில் உள்ள அதிமுகவினரை முதலமைச்சர் ஸ்டாலின் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. கூட்டுறவு சங்கப் பதவிகளில் அதிமுகவினர் அலப்பறைகள் தாங்கமுடியவில்லை என அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரும் கடந்த 6 மாதங்களாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் கூறியும், இருந்துவிட்டுப் போகிறார்கள் என பெருந்தன்மையை காட்டிவந்தார்.

அதிமுக தலைவர்
இந்தச் சூழலில் தேனி மாவட்டத்தில் இருந்து மறைந்த திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரின் மகன் எழுதிய கடிதம் தான் முதலமைச்சர் ஸ்டாலினை ரொம்பவே பாதிக்கவும், யோசிக்கவும் வைத்திருக்கிறது. அதாவது மாவட்ட நில வள வங்கியில் கடன் கேட்டு, கடனுக்கான அனைத்து ஆவணங்களையும் சமர்பித்து பணம் விடுவிக்கப்பட்ட சூழலில், அந்த நில வள வங்கியின் தலைவராக உள்ள அதிமுக நிர்வாகி ஒருவர் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார். திமுக கரைவேட்டி கட்டியிருக்கிறீர்கள், முன்பு இதை சொல்லவே இல்லையே எனக் கூறி சாங்ஷன் செய்யப்பட்ட கடன் தொகையை நிறுத்தி காசோலையில் கையெழுத்து போட மறுத்திருக்கிறார்.

உருக்கமான கடிதம்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உருக்கமாக எழுதிய கடிதத்தில் தனது மனக்குமுறல்களை கொட்டியிருக்கிறார். திமுக ஆட்சி நடக்கும் சூழலில் திமுகவினருக்கே இது போன்ற பாதகத்தை கூட்டுறவு சங்கங்களில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள் செய்வதாக தெரிவித்திருக்கிறார். கட்சிக்காக உழைத்து உயிரை விட்ட திமுக நிர்வாகியின் குடும்பத்திற்கே ஆட்சியின் பலன் சென்று சேராமல் லோக்கல் அதிமுககாரர் ஒருவர் போட்ட முட்டுக்கட்டையால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

நிலவள வங்கி
கூட்டுறவு சங்கங்கள், நிலவள வங்கி என அனைத்திலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மோசடிகளை தோண்டி எடுக்கும்படி கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா தொடர்பாகவும் ஒரு வாரத்துக்கு முன்பாக விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதனடிப்படையிலேயே இன்று அந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video

அதிமுகவினர் பதவிக்காலம்
இதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் உள்ளவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகளுக்கு வந்த அதிமுகவினரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிதாக நடத்தப்படும் தேர்தலின் மூலம் திமுகவினர் பொறுப்புகளுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications