பெரிய ஆப்பு.. சென்னையில் வாகனம் ஓட்டுவோருக்கு டிஜிட்டல் பொறி.. ஆனாலும் இது நல்லதுதான்! ஏன் தெரியுமா
சென்னை: சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளில் நமது கண்ணுக்கே தெரியாத ஒருவிதப் பொறி இருக்கிறது. இதனால் வாகனம் ஓட்டுவோர் அதிக அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அப்படி வாகன ஓட்டிகளைப் பொறி வைத்துப் பிடிக்கும் அந்த அமைப்பு என்ன.. இதனால் நமக்கு நன்மை எப்படி ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
பொதுவாக நாம் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, எதாவது ஒரு போக்குவரத்து காவலர் நமது வாகனத்தை நிறுத்துவார். லைசன்ஸ் முதல் எல்லா ஆவணங்களையும் கேட்பார். சில நேரங்களில் அப்போது வாக்குவாதம் கூட ஏற்படும். அதன் பிறகு நாம் எதாவது விதிமீறலில் ஈடுபட்டு இருந்தால் நமக்கு அபராதம் விதித்து சலான் கொடுப்பார்.

அபராத முறை
இத்தனை காலமாகவே இந்த ஒரு நடைமுறையே இருந்து வந்துள்ளது. இப்படி நடக்கும்போது எதற்காக அபராதம்.. நாம் என்ன விதிமீறலில் ஈடுபட்டோம் என்பது தெளிவாகத் தெரியும். மீண்டும் அந்தத் தப்பைச் செய்ய மாட்டோம். ஆனால், தென் இந்தியாவின் முக்கிய ஐடி நகரங்களான சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இரு நகரங்களிலும் சாலைகளில் உள்ள கேமராக்களே காவலர்களுக்குப் பதிலாகச் செயல்படுகின்றன. பேப்பர் சலான் அனைத்தும் டிஜிட்டல் சலானாக மாறிவிட்டது.
ITMS எனப்படும் "அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளின் முன்னோடியாக சென்னையும் ஹைதராபாத்தும் மாறியுள்ளது. இரு நகரங்களும் நாட்டின் முக்கிய ஐடி மையங்களாக இருப்பதாலோ என்னவோ, இந்த ஊர்களின் போலீசார் செயற்கை நுண்ணறிவை (AI) டிராபிக் விதிமீறலைக் கண்காணிக்கும் வேலைகளில் இறக்கியுள்ளனர். இதன் காரணமாக 24/7 செயல்படும் ஒரு கண்காணிப்பு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதக் கண்களுக்குத் தப்பிக்கும் பல விதிமீறல்களை இந்த கம்ப்யூட்டர் அமைப்பு துல்லியமாகக் கண்டறிந்து பதிவு செய்கிறது.
ஹைதராபாத்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பல பகுதிகளில் இந்த மாற்றம் வியக்கத்தக்கதாக உள்ளது. இங்குப் பெரும்பாலான போக்குவரத்து அபராதங்கள் இப்போது டிஜிட்டல் முறையிலேயே மாறி இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதாவது டிராபிக் சிக்னலில் ஸ்டாப் லைனை லேசாக தாண்டினாலும் கூட அபராதம் வரும். சிக்னல் லேன் மாறுவது, வேகக் கட்டுப்பாட்டை மீறி செல்வது என எதுவாக இருந்தாலும் போலீஸ் கண்களில் தப்பினாலும் கேமராக்கள் தூக்கிவிடும். காவலர் இல்லாமலேயே உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாக அண்ணா சாலை, ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற முக்கிய சாலைகளில் போலீசார், ANPR விரிவான தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இந்தக் கேமராக்கள் அதிவேகமாகச் செல்பவர்களை மட்டுமல்லாமல் இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரையும் கண்டுபிடிக்கிறது.
அதிலும் ஜீப்ரா கிராசிங் விதிமீறல்களுக்குக் கூட இப்போது அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது பாதசாரிகள் சாலையைக் கடக்க ஜீப்ரா கிராசிங் போட்டு, அங்கு சிக்னல் அமைத்திருப்பார்கள். இந்த சிக்னல்களில் நிற்காத வாகனங்களுக்கு மிக அரிதாகவே அபராதம் விதிக்கப்படும். ஆனால், கேமராக்கள் வந்த பிறகு, இந்த விதிமீறலுக்கும் அபராதம் அதிகம் விதிக்கப்படுகிறது.
ரொம்ப ஸ்ட்ரிக்ட்
அதேபோல முக்கிய சாலைகளில் பாயிண்ட் டூ பாயிண்ட் என்ற கண்காணிப்பு முறையை அமல்படுத்தியுள்ளனர். அதாவது ஒரு சாலையில் இரு வேறு பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்படும். முதல் கேமராவில் தென்படும் வாகனம் அடுத்து இரண்டாவது கேமராவில் தென்பட எத்தனை நேரம் ஆகிறது என்பதைப் பொறுத்தும் கூட வாகனத்தின் சராசரி வேகத்தைக் கணக்கிடுகிறது. எனவே, கேமரா அருகே வேகத்தைக் குறைத்துவிட்டு, பிறகு ஓவர் ஸ்பீட்டில் போனால் அதையும் கேமரா கண்டுபிடித்து பைன் போடும்.
ஏன் நல்லது
பொதுவாக இந்த அபராதங்கள் குறித்த தகவல்கள் நமது செல்போன் நம்பருக்கே வந்துவிடும். இருப்பினும், சில நேரங்களில் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக அபராதம் வராமல் கூடப் போகலாம். இதனால் சலானை உரிய நேரத்தில் கட்ட முடியாமல் போய்.. அதற்கும் கூடக் கூடுதல் அபராதம் நாம் கட்ட வேண்டிய சூழல் உருவாகும். அதைத் தடுக்கக் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை உங்கள் வண்டிக்கு எதாவது அபராதம் இருக்கிறதா என்பதை ஆன்னைலின் செக் செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆட்டோமெடிக் முறையால் அபராதங்கள் அதிகரிக்கும். இது பொதுமக்கள் இம்சை தான் என்றாலும் கூட சாலையில் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடைமுறைகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.












Click it and Unblock the Notifications