தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்யக்கோரி வழக்கு.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் தாம்பரம் மாநகர் அலுவலகத்தை காலி செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தப்படி வாடகை வழங்காமல், பொதுப்பணித்துறையின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாதம் ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 438 என வாடகை தருவதாகவும், காலி செய்து கொடுக்க கோரியுள்ள நிலையில், அனுமதியின்றி பல்வேறு மாறுதல்களை கட்டிடத்தில் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், "புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகர காவல் அலுவலகத்துக்காக, சோழிங்கநல்லூரில் எங்களுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் வாடகைக்கு வழங்கினோம். அதன்படி மாதம் ரூ.10 லட்சத்து 14 ஆயிரத்து 300 என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிந்தது. இதையடுத்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டிடத்தில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் பல்வேறு பணிகளை செய்து கொடுத்திருக்கிறோம்.

ஆனால் தமிழக அரசுடன், நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தப்படி எங்களுக்கு வாடகை வழங்கவில்லை.. பொதுப்பணித்துறையின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி மாதம் ரூ.6 லட்சத்து 8 ஆயிரத்து 438 என நிர்ணயம் செய்ததார்கள். அதன்படியே கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான வாடகை தொகையை காசோலையாக வழங்கப்பட்டது.
இதன் காரணமாக குத்தகை காலத்தை நாங்கள் நீட்டிக்க விரும்பவில்லை. அதன்பிறகு 2023-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான வாடகையாக ரூ.97 லட்சத்து 10 ஆயிரத்து 792 வழங்கினார்கள். தற்போது எங்களது அனுமதியின்றி பல்வேறு கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே எங்களது கட்டிடத்தை காலி செய்து எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அவர்கள் மனுவில் கூறியிருந்தார்கள்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ராகவாச்சாரி வாதிடுகையில், "இந்த வாடகை கட்டிடம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தபிறகு சில மாதங்களுக்கான வாடகையை கொடுத்து உள்ளனர். அதுவும் ஒப்பந்தப்படி ரூ.10 லட்சம் கொடுக்காமல், ரூ.6 லட்சம் என்ற அடிப்படையில் வழங்கி உள்ளனர்.
ஏற்கனவே காலி செய்து கொடுக்க கோரியுள்ள நிலையில், உரிமையாளர்களின் அனுமதியின்றி பல்வேறு மாறுதல்களை செய்து வருகின்றனர். எனவே தாம்பரம் மாநகர கமிஷனர் அலுவலகம் இயங்கி வரும் அந்த கட்டிடத்தை உடனடியாக காலி செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications