கி.ரா. முதல் ஒளவை நடராசன் வரை! வீடு தேடி வந்த அரசு மரியாதை! -ஸ்டாலின் ஆட்சியில் நடந்த மாபெரும் மாற்றம்
சென்னை: 'அதிகாரத்தில் இருந்தவர்களுக்குத்தான் அரசு மரியாதை' என்பது ஆங்கிலேயர் கால சட்டம். அந்த நடைமுறை இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மாறியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், ராணுவ வீரர்கள் என்ற வரைமுறை மாறி, சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தவர்களுக்கு 'அரசு மரியாதை' என்ற புதிய நடைமுறை அறிமுகத்துக்கு வந்துள்ளது.
'அரசு மரியாதை' என்ற எல்லையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஆழப்படுத்தி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகம் அதுவரை அறிந்திராத ஒரு புதிய நடைமுறையை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தபோது 'அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்' என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு முன்னதாக தமிழக அரசு பலருக்கும் இந்த மரியாதையைச் செய்திருக்கிறது.
குறிப்பாக, நடிகர் சிவாஜிகணேசன் மறைந்தபோது அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் திரைத்துறையினருக்கு இந்த கவுரவம் வழங்கப்படுவதில் ஆச்சரியமில்லை.
இந்திய அளவில்கூட இதே நிலைதான் நிலவுகிறது. நடிகை ஸ்ரீதேவி மறைந்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது. அத்துடன் அரசும் அவருக்கு உரிய மரியாதையை வழங்கியது. இதேபோல், லதா மங்கேஷ்கர், அண்மையில் மறைந்த பாடகர் கே.கே, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் எனப் பெரிய பட்டியலே போடலாம்.
இவர்கள் அனைவரும் வாழும் காலத்திலேயே பெரும் புகழைப் பெற்றவர்கள். அத்துடன் தங்களுக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர்கள். ஆனால், இந்த அளவுகோல்கள் எதுவும் ஓர் எழுத்தாளருக்குப் பொருந்தாது. அதுவும் கி.ராஜநாராயணன், பொதுவெளியில் மிகவும் பிரபலமானவர் அல்ல. ஆனால், அவரது படைப்புகள் தரமானவை. அவரது வாசகப் பரப்பு சிறியதாக இருந்தாலும் ஒரு மொழிக்கு அவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது.
அதனை உணர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படைப்புலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஜெயகாந்தனுக்கு கிடைக்காத மரியாதை
காரணம், தமிழ் இலக்கிய உலகை அசைத்துப் போட்ட பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைந்தபோது இதேபோன்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அன்று அரசு சார்பில் ஒரு மலர் வளையம்கூட வைக்கப்படவில்லை என்பது வரலாற்றுச் சோகம்.
ஆனால், அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். கூடவே இரங்கல் செய்தியில், 'அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்துவிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இசபெல்லா மருத்துவமனையில் ஜெயகாந்தன் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து, என் மனைவி ராஜாத்தியுடனும் மகள் கனிமொழியுடனும் நேரில் சென்று பார்த்தேன். அப்போது முதல்வராக நான் இருந்தேன். உடனடியாக அவரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
கி.ராவுக்கு முன்னதாக டி.எம்.காளியண்ணன் கவுண்டர் மறைந்தபோது, இதே அரசு மரியாதையை ஸ்டாலின் வழங்கினார். காளியண்ணன், தனது 28 ஆவது வயதில் (1948) இந்திய அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். இந்திய அளவில் பழுத்த அரசியல் தலைவர். 101 வயதில் மறைந்தார். ஆகவே அந்தக் கவனம் கிடைத்தது. ஆனால், இந்த வரம்புக்குள் கி.ராஜநாராயணன் வரமாட்டார்.
இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் தொ.பரமசிவன் மறைந்தார். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வில் அதிகம் சாதித்தவர் தொ.ப. ஆகவே, அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு கலை எழுத்தாளர்கள் சங்கம் (தமுகஎகச) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செய்தியை வெளியிட்டாரே தவிர, அரசு மரியாதையைத் தரவில்லை.
ஆனால், தமிழறிஞர் ஒளவை நடராசன் இறந்தபோது அரசு மரியாதையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். முறைப்படி 21 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அந்தவகையில், புதிய பாதையை திமுக அரசு உருவாக்கியுள்ளது.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் சொல்வது என்ன?
"முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு எழுத்துத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, இன்றைக்குப் புத்தகக் கண்காட்சியை மாவட்டம்தோறும் விரிவுபடுத்தியுள்ளார். அதேபோல, 'தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகத்தைக் கொடுக்க வேண்டும், சால்வைகள் அணிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்' என ஸ்டாலின் முன்பே தெரிவித்திருக்கிறார்.
அதுபோலத்தான் கி.ராவுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. தமிழறிஞர் இரா.இளங்குமரன் மறைந்தபோது அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த மாற்றத்தை ஆரோக்கியமானதாகவே நான் பார்க்கிறேன்'' என்கிறார், எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்.
தொடர்ந்து பேசுகையில், ''கமலாதாஸ், புனேவில் இறந்தபோது அரசு செலவில் விமானத்தில் கொண்டுவந்து உரிய மரியாதையுடன் கேரளாவில் அவரை அடக்கம் செய்தார்கள். லத்தீன்-அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் இறந்தபோது விமரிசையாக நாடே அவருக்கு மரியாதை செலுத்தியது.
அந்தளவுக்கு வாசிப்பு உள்ள சமூகமாக அவர்கள் உள்ளனர். நம்முடைய சமூகத்தை அத்துடன் ஒப்பிட முடியாது. ஆனால், இந்த நிலையை ஸ்டாலின் மாற்றி உள்ளார். நான்கூட கி.ரா. இறந்தபோது, 'அரசு மரியாதை தரவேண்டும்' என்ற கோரிக்கையுடன் ஓர் உயர் அதிகாரியிடம் பேசினேன். அவர், 'நாங்கள் முன்பே அந்த முடிவை எடுத்துவிட்டோம்' என்று கூறினார். அந்தளவுக்கு இந்த அரசு வேகமாக செயல்படுகிறது" என்கிறார்.

பெருமாள் முருகனின் பார்வை
அடுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் பேசினோம். "இந்த மரபு முதலில் ராணுவத்துறையில் இருந்தது. பின்னர், பிரதமர், குடியரசுத் தலைவர், முதலமைச்சர் என விரிவடைந்தது. ஆனால் சமூக முன்னேற்றத்துக்குப் பங்களிப்பு செய்தவர்களுக்கு எளிதாகக் கிடைக்கவில்லை.
இதனை உடைக்கும் வகையில், தந்தை பெரியார் இறந்தபோது அவருக்கு அரசு மரியாதையை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார். பெரியார், அரசின் எந்த உயர் பதவிகளிலும் இல்லாதவர். ஆனால், சமூக முன்னேற்றத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று கி.ரா போன்ற எழுத்தாளர்களின் இறுதிச் சடங்குகளில் அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. அன்று அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுக்குக் கிடைத்த அதே அங்கீகாரம் இன்று எழுத்தாளர் மட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நிச்சயமாக நல்ல விஷயம்.
எழுத்தாளர்கள் மீது அரசு என்ன மாதிரியான மரியாதை வைத்துள்ளது என்பதற்கான வெளிப்பாடுதான் இது. சமூகத்தில் எழுத்தாளர்களும் முக்கியமானவர்கள் என்ற பார்வையைக் கொண்டுவருவது பெரிய விஷயம். அந்தவகையில், இதை வரவேற்கிறேன்.
அதேநேரம், அரசு மரியாதையை வழங்குவது தொடர்பாக அரசு தெளிவான வரையறையை உருவாக்கவில்லை. ஒருவர் மறையும்போது அவரது பங்களிப்பை வைத்து பரிசீலனை செய்து அரசு இந்த முடிவை எடுக்கிறது. இதற்கு வரைமுறையை வகுப்பது சிரமம். எனவே எல்லோருக்கும் தரவேண்டும் என எதிர்பார்த்தால் அதைச் செய்வது முடியாத காரியம்" என்கிறார்.

எழுத்தாளர் சல்மாவின் கருத்து
அரசு மரியாதை தொடர்பாக மேலதிக விவரங்களைப் பெறுவதற்காக எழுத்தாளர் சல்மாவிடம் பேசினோம். "வெளிநாடுகளில் உள்ள எழுத்தாளர்களுக்கு இதுபோன்ற மரியாதைகள் கிடைக்கின்றன. அண்மையில் எகிப்து சென்றிருந்தேன். அங்கே கிரீக் எழுத்தாளர் கவாபியின் வீட்டை அரசு அருங்காட்சியகமாக வைத்துப் பாதுகாத்து வருவதைப் பார்த்தேன். அந்தளவுக்கு நம் நாடு இல்லை'' என்கிறார்.
மேலும், ''திரைத்துறை சார்ந்த நட்சத்திரங்களுக்கு இறுதிச்சடங்கின்போது அரசு மரியாதை கிடைத்துள்ளது. ஆனால், எழுத்தாளர்களுக்குக் கிடைத்தது இல்லை. அதை முதலமைச்சர் ஸ்டாலின் செய்துள்ளார். இது ஒரு கலாசார மாற்றம். அரசு மட்டத்தில் நடந்துள்ள மிக முக்கியமான மாற்றம்" என்கிறார் சல்மா.












Click it and Unblock the Notifications