இந்த தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடிக்கு மாநில கட்சிகள் உணர்த்தும் பாடம் என்ன?
சென்னை: இப்போது நடந்து முடிந்தது காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையேயான தேர்தல் கிடையாது.. இந்த தேர்தல் பாஜகவிற்கும் மாநில கட்சிகளுக்கும் இடையேயான தேர்தலாக பார்க்கப்படுகிறது. காரணம் ஒரே நாடு, ஒரு மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என்கிற பிரச்சாரங்களை மாநிலங்கள் ஏற்கவில்லை.. அதனால் மாநிலக் கட்சிகள் இந்த முறை கடுமையாக எதிர்த்துள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் தனியாக வென்றுள்ளது. இதில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்றால், பீகாரில் உள்ள மாநிலக்கட்சியான நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு வேண்டும்.

இதுதவிர மகாராஷ்டிராவில் உள்ள ஷிண்டே கட்சி (சிவசேனா ) அல்லது லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவு வேண்டும்.. இவை எல்லாமே மாநில கட்சிகள் ஆகும். அந்தந்த மாநிலங்களின் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்பவை. தங்கள் மாநிலத்திற்கு ஒன்று என்றால், அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கும் கட்சிகள் ஆகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என்ற கோஷத்தை மாநில கட்சிகள் எல்லாமே கடுமையாக எதிர்த்தன. இதுதவிர சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றால் தாங்கள் பழிவாங்கப்படுவதாக குற்றம்சாட்டின. மேலும் தங்கள் கட்சிகளை பாஜக அழிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின,
இதை எல்லாம் பார்த்த மாநில கட்சிகள், பலவீனமான நிலையில் இருந்த காங்கிரஸை தன் முதுகில் சுமந்து கொண்டு சிப்பாய்களை போல் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை எதிர்க்க தொடங்கின. ஒருவரோ அல்லது இருவரோ அல்லது மொத்தம் 26 பேர்.. மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கின. இந்த கூட்டணியை உருவாக்கியதே இப்போது பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ்குமார் என்பது மறுக்க முடியாத உண்மை.
அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சாசனத்தை மாற்றி, மாநிலங்களை எல்லாம் யூனியன் பிரதேசம் போல் ஆக்கிவிடுவோர்களோ என்ற பயம் மாநில கட்சிகளுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாநிலங்கள் எல்லாம் மாநகராட்சிகள் போல் அதிகாரங்களை கொண்ட அமைப்பாக மாறுமோ என்ற அச்சமும் மாநில கட்சிகளுக்கு வந்தது. இதுதவிர சிபிஐ, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைளும் எதிர்க்கட்சிகளை கடும் கோபத்திற்கு ஆளாக்கின. இறுதியில் எல்லாரும் ஒன்று சேர்ந்தனர். அப்படி ஒன்று சேர்ந்து கிட்டத்தட்ட 234 இடங்களை வென்றுள்ளனர்.
தற்போதைய சூழலில் தெலுங்கு தேசமும், நிதீஷ்குமாரின் கட்சியும், இந்தியா கூட்டணியை ஆதரித்தால் உதிரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றிவிடும்.. இதுதான் எதார்த்தம். ஆனால் தெலுங்குதேசமும், ஐக்கிய ஜனதா தளமும் அப்படி முடிவெடுப்பார்களா அல்லது பாஜகவிற்கு அதிகப்படியான நிபந்தனை விதித்து ஆட்சிக்கு ஆதரவு தருவார்களா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் போன்ற விஷயங்களை இனி யாருமே முன்னிறுத்தக்கூடாது என்பதை மாநிலக் கட்சிகள் இந்த தேர்தலில் கடுமையாக பிரச்சாரம் செய்து சாதித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் பலவீனம் ஒரு நாள் பாஜகவிற்கு நல்லதல்ல என்று ஒருமுறை பாஜக மூத்த அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார். அவர் கூறியது படி காங்கிரஸ் கட்சியின் பலவீனம் தான் இப்போது பாஜகவை பாதித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநிலக்கட்சிகளின் விருப்பப்படி தான் இனி பாஜக ஆட்சியமைக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications