வாகையை விடுங்க! 3 கலர்கள், 28 நட்சத்திரங்கள்! விஜய்யின் கொடிக்கு என்ன அர்த்தம்? தவெக கட்சி விளக்கம்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கொடி குறித்து அக்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கட்சிக் கொடியின் பின்னால் உள்ள வரலாற்றை தவெக மாநாட்டில் தெரிவிப்பேன் என விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தனது கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்சியை எப்போது தொடங்குவார், என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் கட்சியின் பெயர் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் கட்சியின் கொடி என்ன என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
இந்த விழாவுக்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்ஸி ஆனந்து வரவேற்றார். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர், கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய்யின் கொடி அறிமுக விழாவிற்கு அவருடைய தாய் ஷோபாவும், தந்தை சந்திரசேகரும் வருகை தந்தனர். இதையடுத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் விஜய் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அதில் சிவப்பு , மஞ்சள் நிறத்தில் கொடியிருந்தது. நடுவே வெற்றிக்கு அடையாளமான வாகை மலரும், இரு போர் யானைகளும் இருந்தன.
இந்த கொடியை பனையூர் கட்சி அலுவலகத்திலும் அவர் ஏற்றி வைத்தார். இதை தவெக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றார். பிறகு கொடி பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கட்சி கொடி குறித்து அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கொடியல் நீலம், பச்சை, மஞ்சள் ஆகிய 3 நிறங்களும் 28 நட்சத்திரங்களும் உள்ளன.
இதில் 23 பச்சை, 5 நீல நட்சத்திரங்கள் உள்ளன. அது போல் சிவப்பு, மஞ்சள், சாம்பல், நீலம் , பச்சை, ஊதா ஆகிய 6 நிறங்கள் கொடியில் இடம் பெற்றுள்ளன. மேலும் கொடியில் இடம்பெற்றுள்ள வாகை மலர், பழந்தமிழர் போரில் வென்ற பிறகு சூடும் மலர். யானை, வெற்றி போராட்ட குணம், வளமையின் அடையாளம் என்று தமிழக வெற்றிக் கழகம் விளக்கமளித்துள்ளது.
"இந்த கொடிக்கு வரலாற்று கதை இருக்கிறது. அதை தவெக மாநாட்டில் அறிவிப்பேன்" என நடிகர் விஜய் தெரிவித்திருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த விழாவுக்கு 5000 பேர் வருவார்கள் என கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டது. ஆனால் வெறும் 300 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications