"ஆதி காரணம்".. அண்ணாமலை அப்படி சொல்ல.. எடப்பாடி இப்படி சொல்ல.. அதிமுக - பாஜக மோதலுக்கு இதான் காரணம்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலை ஒற்றை தலைமை குறித்து பேச தொடங்கினார்.
சென்னை: அதிமுக பாஜக இடையிலான மோதலுக்கு தொடக்கத்தில் இருந்தே இரண்டு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பல்வேறு "வாய்க்கால்" தகராறுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதிமுக பாஜக இடையிலான மோதல் இப்போது தொடங்கியது அல்ல. அதிமுக - பாஜக இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல்கள் இருந்து வந்தது.
தற்போது இந்த மோதல் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. இந்த மோதல் எப்படி விஸ்வரூபம் எடுத்தது என்று ஒவ்வொரு சம்பவங்களாக பார்க்கலாம்.

சம்பவம் 1
கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவை சிவி சண்முகம் விமர்சனம் செய்து இருந்தார். சி வி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அதிமுக - பாஜக மோதல் தொடர்பான விவாதங்கள் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. அதிமுக + பாஜக கூட்டணி மொத்தமாக முறிகிறதா.. பாஜகவை கழற்றிவிட எடப்பாடி முடிவு செய்து உள்ளாரோ என்ற விவாதங்கள் எழுந்தன.

சம்பவம் 2
எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறினார். ஆனால் இந்த கூட்டணியில் பாஜக தொடருமா என்று சொல்லவில்லை. முத்தாய்ப்பாக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் முடிந்த அளவு பாஜகவுடன் நெருக்கம் காட்டாமல் இருந்தார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி தொடரும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறினார். மற்றபடி வேறு எங்கும் பாஜகவுடன் தான் நெருக்கமாக இருப்பதாக அவர் காட்டிக்கொள்ளவில்லை.

சம்பவம் 3
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலை ஒற்றை தலைமை குறித்து பேச தொடங்கினார். அதில், இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுவிட்டது. அதிமுக ஒன்று சேராததே தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்சினை எழுந்தது. இதை நாங்கள் முன்பே சொன்னோம். ஆனால் எங்கள் மீது கோபம் அடைந்தனர். இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது. இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என பாஜக அப்போதே கூறியது. மேலும் ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது, என்று அண்ணாமலை கூறி இருந்தார். அவர் ஒற்றை தலைமைக்கு எதிராக பேசுகிறாரே என்ற கேள்விகளை எழுப்பியது.

சம்பவம் 4
இதையடுத்து பாஜகவின் நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு, என்று குறிப்பிட்டார். இவரையும் எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி கட்சிக்குள் வரவேற்றார்.

சம்பவம் 5
இந்த விவகாரத்தில் கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது, என்றார். இதையடுத்து அண்ணாமலை அளித்த பேட்டியில், நான் பாஜக தலைவர்.. நான் ஜெயலலிதா.. கலைஞர் போல பெரிய தலைவர் என்று அதிமுகவை சீண்டினார்.

சம்பவம் 6
இதற்கு அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் கட்சி தலைவர்கள் எல்லாம் தலைவர்கள் ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் யாரும் ஜெயலலிதா போல பெரிய தலைவர் ஆக முடியாது. அவரெல்லாம் பெரிய ஆளுமை என்று அண்ணாமலையை மடக்கினார்.

சம்பவம் 7
இந்த நிலையில் அண்ணாமலை தற்போது பாஜக கூட்டத்தில் பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம்.

முடிந்தது
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றியை முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம் என்று பேசி உள்ளார். இப்படி மாற்றி மாற்றி இரண்டு தரப்பும் பேசிய, செய்த செயல்களால் இவர்களின் கூட்டணி மொத்தமாக முறிகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications