45 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ஆதவ் அர்ஜுனா சந்திப்பில் என்ன நடந்தது! திருமாவளவன் பரபர
சென்னை: தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திடீரென ஆதவ் அர்ஜுனா விசிக அலுவலகத்திற்குச் சென்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தார். இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வரும் சூழலில், இது தொடர்பாக திருமாவளவனே விளக்கமளித்துள்ளார்.
தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் திடீரென விசிக அலுவலகத்திற்கு வந்து திருமாவளவனைச் சந்தித்தார்.

விஜய் கட்சியில் இணைந்த உடன் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா சந்தித்தது பேசுபொருள் ஆனது. இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்குமோ எனச் சொல்லப்பட்டது.
திருமாவளவன்
சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்ட திருமாவளவன், தன்னிடம் வாழ்த்து பெறவே ஆதவ் அர்ஜுனா வந்ததாகத் தெரிவித்தார். மேலும், மாற்றுக் கட்சியில் இணைந்தாலும் வாழ்த்து பெற வந்து புதிய அரசியல் நாகரீகத்தை ஆதவ் தொடங்கி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசியலுக்கே தொடக்கம்
இது தொடர்பாக திருமாவளவன் மேலும் கூறுகையில், "இந்த சந்திப்பு குறித்து ரொம்ப அரசியல் பேச வேண்டாம்.. ஆதவ் அர்ஜுனா செய்துள்ளது தமிழ்நாடு அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைப்பதாக உள்ளது. பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைக்கப்பட்டாலோ அதைப் பகையாகக் கருதும் பாரம்பரியமே அரசியல் களத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
பகையாகக் கருதவில்லை:
ஆனால், ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து வெளியேறும் சூழல் எழுந்த போதும் அதை அவர் பகையாகக் கருதவில்லை. வலிகள் இருந்தாலும் கூட அதை எதிராக நிறுத்தவில்லை. தான் இன்னொரு கட்சிக்குப் போய் பொதுச்செயலாளர் பொறுப்பு பெற்றுச் செயல்படும் சூழலிலும் உங்கள் வாழ்த்தும் தேவை என இந்த அலுவலகத்திற்கு அவர் வந்துள்ளார்.
தவெகவில் இணைந்த கையோடு.. விசிக அலுவலகத்திற்கு சென்ற ஆதவ் அர்ஜுனா! திருமாவளவன் உடன் திடீர் சந்திப்பு
இது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாகரீகமாக நான் பார்க்கிறேன். கருத்தியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும் களத்தில் நேர் எதிராகச் செயல்படும் சூழல் இருந்தாலும் கூட இத்தகைய நட்புறவைப் பேணுவது நாகரிகமான அணுகுமுறை.
ஆதவ் அர்ஜுனா:
இந்த அரசியல் நாகரீகத்தை நான் கற்றுக்கொடுத்தேன் என்பதை விட நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். களத்தில் கடுமையாக முரண்பட்டாலும், அதைப் பகையாகக் கருதக் கூடாது. பொதுவாகச் சிலர் கட்சியில் இருந்து வெளியேறிய உடனேயே அவதூறு கருத்துகளைப் பரப்புவார்கள். தலைமை மீதான பிம்பத்தைச் சிதைக்க முயல்வார்கள். ஆனால், ஆதவ் அர்ஜுனா அதுபோல எதுவும் செய்யவில்லை.
பெரியார் அரசியல்:
தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருந்ததைச் சுட்டிக்காட்டி, பெரியார்- அம்பேத்கர் கொள்கை வழியில் தமிழக வெற்றிக் கழகமும் பயணிக்கும் என்றார். விசிக பேசும் கொள்கையை தவெகவும் பேசுவதாகக் குறிப்பிட்டார். பெரியார் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள சூழலில், பெரியார் தேவை இன்று எந்தளவுக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்பதை என்னுடன் பகிர்ந்து கொண்டார். விசிகவும் அதையே தான் வலியுறுத்தி வருகிறார்.
விஜய் உடன் இணைந்தாலும் பெரியார் அரசியலையே உயர்த்தி பிடிப்பேன் என்று குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் அரசியல் கணக்குகள் எதுவும் இல்லை. இது தமிழக அரசியலுக்கு புதிய தொடக்கம் என்றே நான் பார்க்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications