தவெகவில் இணைந்த கையோடு.. விசிக அலுவலகத்திற்கு சென்ற ஆதவ் அர்ஜுனா! திருமாவளவன் உடன் திடீர் சந்திப்பு
சென்னை: இன்று விஜய்யின் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திடீரென விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தார். விசிக அலுவலகத்திற்குச் சென்ற ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் நேரில் சந்தித்துப் பேசினார். விஜய் கட்சியில் இணைந்த உடனே அவர் திருமாவளவனைச் சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
விசிகவில் இருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆதவ் அர்ஜுனா. அங்குத் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவுக்கு எதிரான கருத்துகளைச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா:
குறிப்பாக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவின் போது அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்புவது. திமுக தலைமையை விமர்சிக்கும் வகையில் அவர் கடுமையான கருத்துகளைக் கூறியிருந்தார். இதையடுத்து கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை தற்காலிகமாக நீக்கிவைப்பதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டிருந்தர். இந்த உத்தரவு வந்து சில நாட்களில் ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகினார்.
தவெகவில் பதவி:
சில காலம் அமைதியாக இருந்த அவர் சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தார். அப்போதே அவர் தவெகவில் இணையலாம் எனத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் அவர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அங்கு அவருக்குத் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் கட்சிக்கான 2026 தேர்தல் பணிகளை அவர் கவனிப்பார் என்று சொல்லப்படுகிறது.
திருமாவளவன் உடன் சந்திப்பு:
இதற்கிடையே தவெகவில் இணைந்த சற்று நேரத்திலேயே சென்னையில் விசிக தலைவர் திருமாவளவனைச் சந்தித்தார் ஆதவ் அர்ஜுனா.. விசிக அலுவலகத்திற்குச் சென்ற ஆதவ் அர்ஜுனா, திருமாவளவன் சந்தித்துள்ளார். தவெகவில் அவருக்குத் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக அவர் திருமாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆதவ் அர்ஜுனா விளக்கம்:
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கொள்கை ரீதியான பயணத்தையும் கள அரசியலையும் ஆசான் திருமாவளவனிடம் இருந்தே கற்றுக்கொண்டதாகத் தெரிவித்த அவர், ஒரு தனயனாக தந்தையிடம் வாழ்த்து பெற வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரது கொள்கை வழியில் தமிழக வெற்றி கழகம் தொடர்ந்து பயணிக்கும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். மேலும், தலைவர் திருமா நிறைய அறிவுரைகளை வழங்கியதாகவும் குறிப்பாகப் பொறுமை மிக முக்கியம் என்று குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கணக்கு?
அதேநேரம் இதில் அரசியல் கணக்கும் கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய் மற்றும் திருமாவளவனை ஒரே கூட்டணியில் அழைத்து வரத்தான் ஆதவ் அர்ஜுனா முதலில் விசிகவில் இருந்தபோது முயன்றார். இருப்பினும், அப்போது அது நடைபெறவில்லை. ஆதவ் அர்ஜுனா இப்போது தவெகவில் இணைந்துள்ள நிலையில், அங்கிருந்து விசிகவுடன் கூட்டணி அமைக்க முயலலாம் என்று சொல்லப்படுகிறது. இருவரும் சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசிய நிலையில், இதில் அரசியல் தொடர்பாகவும் பேசியிருக்காலம் என்றே சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications