பெரிய கலகம் வெடிக்கும்.. டாக்டர் ஐயாக்கிட்ட சொல்லுங்க.. பாமகவிற்கு செக் வைத்த எடப்பாடி.. போச்சு!
சென்னை: பாமகவுக்கு மீண்டும் ராஜ்யசபா சீட்டை வழங்குவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஜூலையில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டில் பாமக தலைவர் அன்புமணியின் ராஜ்யசபாவும் அடக்கம்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவுக்கு 1 ராஜ்யசபா இடத்தை ஒதுக்கினார் எடப்பாடி. அதன் மூலம் ராஜ்யசபா எம்.பி.யானார் டாக்டர் அன்புமணி. அவரது பதவி காலம் ஜூலையில் முடிகிறது. 2024-நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கைக்கோர்த்தது பாமக. அன்புமணிக்கு அமைச்சர் பதவி தரப்படும் என்கிற நம்பிக்கை இருந்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர்.

ராஜ்ய சபா சீட்டு
ஆனால், அமைச்சர் பதவி அன்புமணிக்கு கொடுக்கப்படவில்லை. இலவு காத்த கிளியாக இருந்து இருந்து கடந்த 1 வருடமாக வெறுத்து போய்விட்டனர் டாக்டர்கள். இந்த நிலையில் தான் தற்போது அன்புமணியின் ராஜ்யசபா காலியாகிறது. இப்படிப்பட்ட சூழலில், பாமகவின் கெளரவத்தலைவர் ஜி.கே. மணி, தனது இல்லத்திருமண விழா பத்திரிகையைத் தருவதற்காக எடப்பாடியை சந்தித்தார். பத்திரிகை கொடுத்து திருமணத்தில் கலந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார். இவர்களின் சந்திப்பை வைத்து, "அதிமுக கூட்டணியில் பாமக இணைகிறது.
அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டது" என்று செய்திகள் பரவின. இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதிமுகவினரோ அதிர்ச்சியடைந்துள்ளனர். எடப்பாடி - ஜி.கே. மணி சந்திப்பில் நடந்தது என்ன? என்று விசாரித்தபோது, "சந்திப்பில் எடப்பாடியும் மணியும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். விழாவுக்கு அவசியம் வருகிறேன் என உறுதி தந்த எடப்பாடி, டாக்டர் ராமதாசின் நலம் விசாரித்தார். ஒரு கட்டத்தில் அரசியல் ரீதியிலான பேச்சு தொடங்கியது. திமுக ஆட்சியில் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர் கேடுகள் தொடங்கி, ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க ஸ்டாலினுக்கு விருப்பமில்லை; துணிச்சலும் இல்லை என்பது வரை இருவரும் விவாதித்துக்கொண்டனர்.
பாமக துரோகம்
பாமகவுக்கு பாஜக துரோகமிழைத்து விட்டதாகவும் கூறிய ஜி.கே.மணி, 'வருகிற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள டாக்டர் அய்யா விரும்புகிறார். அதற்கு முன்னோட்டமாக, கடந்த முறை வழங்கியது போல அன்புமணிக்கு இந்த முறையும் ராஜ்யசபா சீட்டை ஒதுக்கினால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்' என சொல்லியிருக்கிறார்.
அதற்கு எடப்பாடி, ' அதிமுக கூட்டணிக்கு பாமக வருவது எங்களுக்கு சந்தோஷம் தான். நானும் அதை விரும்புகிறேன். ஆனா, ராஜ்யசபா சீட்டுக்கு என்னால் உத்தரவாதம் தரமுடியாது. ஏன்னா, அதிமுகவின் எம்.எல்.ஏ. பலத்தை வைத்து ஒரு ராஜ்யசபா சீட்தான் ஜெயிக்க முடியும். அப்படியிருக்க அந்த 1 சீட்டையும் உங்களுக்குக் கொடுத்து விட்டால் எப்படி ? எங்கள் கட்சியின் சீனியர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.
கடந்தமுறை 2 இடம் இருந்தது. ஒன்றை கொடுத்தோம். இப்போ அப்படியில்லையே! இருக்கிற 1 சீட்டையும் உங்களுக்கு கொடுத்துவிட்டால் எங்கள் கட்சியில் கலகம் வெடிக்கும். அதனால், கூட்டணிக்கு வாருங்கள். ராஜ்யசபா சீட்டை தவிர மற்ற டேர்ம் அண்ட் கண்டிசன்களை பேசிக்கொள்ளலாம். டாக்டர் அய்யாவிடம் சொல்லுங்கள்' என ராஜ்யசபா இல்லை என்பதை மறுத்து ஜி.கே.மணியை அனுப்பி வைத்துள்ளார் எடப்பாடி" என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications