சென்னை, பெங்களூர் என நாடு முழுக்க பெரிய குழப்பம்.. ஒரே நேரத்தில் 400+ விமானங்கள் ரத்து! என்ன காரணம்?
சென்னை: கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய ஏர்போர்ட்களில் பல நூறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் பெரும் குழப்பமே நிலவியது. ஏர்போர்ட்களில் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியாவில் விமானங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாகவே நாடு முழுக்க பல்வேறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் ரத்து
கடந்த இரு நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக நாடு முழுவதும் பல லட்சம் பணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தத் தாமதத்திற்குப் பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகளே (crew rostering rules) காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி இந்த விதிகள் அமலுக்கு வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை பெரிதாக வெடித்தது.
காரணம் என்ன
இந்த புதிய விதிகள் தங்கள் விமானச் செயல்பாடுகளைப் பாதித்தது உண்மை தான் என இண்டிகோவும் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்த விதிகள் நவம்பரில் அமலுக்கு வரும் என்பது இண்டிகோ உட்பட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் இண்டிகோ உரிய நடவடிக்கையை எடுக்காததே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என வல்லுநர்களும் பைலட் சங்கங்களும் சுட்டிக்காட்டின.
இந்த விதிகள் ஒன்றும் நேற்று அறிவித்து இன்று அமல்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரூல்ஸ் அறிவிக்கப்பட்டன. விமான நிறுவனங்களின் கோரிக்கைகளால் 2 ஆண்டுகள் கால அவகாசம் தரப்பட்டது. அப்படி இருந்தும் இண்டிகோ தயாராகவில்லை என சொல்வதை ஏற்க முடியாது என்கிறார்கள். இது தொடர்பாக இந்திய விமானிகள் கூட்டமைப்பும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பிரஷர் போடும் திட்டம்
விமான தாமதங்கள் மற்றும் ரத்துகளைக் காரணமாக இந்த புதிய விதிகள் ரத்து செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றே கூட இந்தக் குழப்பத்தை விமான நிறுவனங்கள் ஏற்படுத்தலாம் என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர். கடந்த சில நாட்களில் விமான பிரச்சனை மிக மோசமானது. சில விமானங்கள் பத்து மணிநேரம் வரை தாமதமானது. பல நூறு விமானங்கள் ரத்தும் கூட செய்யப்பட்டன.
குறிப்பாக டிசம்பர் 2ம் தேதி வெறும் 35% இண்டிகோ விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் இயக்கப்பட்டன. வழக்கமாக 80% இண்டிகோ விமானங்கள் சரியான நேரத்தில் இயக்கப்படும் நிலையில், அது கடுமையாகச் சரிந்தது. இந்த நிலை மேலும் தொடரும் என அஞ்சப்படுகிறது. இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.
எச்சரிக்கை தேவை
அதாவது ஒரே நேரத்தில் இதுபோல பல விமானங்கள் ரத்து செய்யப்படும்போது, விமானங்களின் எண்ணிக்கை குறையும். அப்போது விமான கட்டணங்கள் உயரும் அபாயமும் இருக்கிறது. மேலும், இப்போதே இந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக் காலங்களில், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் அப்போது நிலைமை கையை விட்டு போகலாம்.!
புதிய விதிகள் என்ன
விமான ஊழியர்களின் சோர்வைக் குறைக்கவும், அவர்களின் பணிநேரத்தை ஒழுங்குபடுத்தவும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. கடந்த 2024 ஜனவரியில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி பைலட் மற்றும் விமான ஊழியர்களுக்கான வாராந்திர ஓய்வு காலம் 36ல் இருந்து 48 மணிநேரமாக நீட்டிக்கப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு மேல் நைட் ஷிப்ட் போடக்கூடாது என்ற விதியும் கொண்டு வரப்பட்டது. மேலும் ஒரு பைலட் மற்றும் விமான தொடர்ச்சியாக இரு பயணங்களுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற விதியும் கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications