ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் பற்றி அறிவிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது ஏன்? - அன்புமணி ராமதாஸ்
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை பற்றி அறிவிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்தது ஏன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தால் கடன் சுமைக்கு உள்ளாகி, இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வந்தது.
இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.

தமிழக அரசின் குழு
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பித்தது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
இதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசு சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த தரவுகளின் அடிப்படையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவை தமிழகா அரசு உருவாக்கியது. அதற்கு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆளுநர் ஒப்புதல்
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை முழுமையாக தடை செய்துள்ளார்கள். இதனை பாமக முழுமையாக வரவேற்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம்.

ஏன் 4 நாட்களாக வெளியிடவில்லை?
இதற்கு காரணம் பல லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் அக்.1ம் தேதி ஒப்புதல் கொடுத்துவிட்டார். தொடர்ந்து 3ம் தேதி அரசிதழில் சட்டம் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சட்டம் பற்றி 4 நாட்களாக ஏன் வெளியிடவில்லை என்று புரியவில்லை. இப்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை யாராவது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications