சென்னை வளர அரசுகள் காரணம் என்றால்.. கோவை வளர அந்த மக்களே முக்கிய காரணம்.. எப்படி?
சென்னை: சென்னை நகரத்தை பொறுத்தவரை அசுர வளர்ச்சி அடைய அரசுகள் முக்கிய காரணம்.. பழங்காலம் முதலே இந்த நகரத்திற்கு முதலீடுகள் குவிந்து தொழில்கள் நடக்கின்றன. ஆனால் கோவையில் அப்படி அல்ல.. கோவை வளர அந்த மக்களே முக்கியமான காரணம் என்கிறார் “டீ“ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் எழுதிவரும் முரளி. இதோ அவரது வார்த்தையில் இருந்து..
அதே நேரம் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகள் வளர அந்த பகுதி மக்களே முக்கிய காரணம்.. இன்றைக்கு திருப்பூர் எப்படி உள்ளதோ அதுபோல் ஜவுளித்தொழிலில் கொடிக்கட்டி பறந்த நகரம் கோவை. விவசாயத்தை தாண்டி கோவை அதிகமாக வளர பருத்தியும், அது சார்ந்த ஜவுளி தொழில்களும் காரணம். தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, மும்பை போல் நெசவு தொழிலில் வளர்ந்து வந்தது. அதேநேரம் கோவை 2000க்கு பிறகு அசுர வளர்ச்சி அடைந்தது. கோவையில் இயல்பாகவே வீட்டுக்கு வீடு தறி பட்டறைகள் அந்த காலங்களில் இருக்கும். அதுவே பின்னாளில் தொழில் முனைவோர்களாக மாற காரணமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட எங்கு பிறந்தவர்கள் என்றாலும் பெரும்பாலும் வேலைக்கு போகவே விரும்புவார்கள். ஆனால் கோவையில் அப்படியே தலைகீழ், முடிந்தவரை தொழில் முனைவோர் ஆகவே விரும்புவார்கள். கோவையில் ஒரு காலத்தில் கணபதிக்கு வேலை தேடி வந்த போது, அத்தனை பேரும் ஏதாவது சிறு தொழில் முனைவோராக மாறவே விரும்பியதை காண முடிந்தது.
கோவை மக்கள் பலர் தொழில் முனைவோராக மாற விரும்பிய காரணத்தால், ஜவுளி தொழிலை தாண்டி, பைப், கிரைண்டர், மிக்ஸி, பம்பு செட்டுகள், சிஎன்சி மிஷின் உற்பத்தி, காற்றாலை அமைப்புகள், கனரக வானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் கோவையில் வேகமாக வளர்ந்தன. இன்றைக்கு கோவை முதல் திருப்பூர் வரை கண்ணுக்கு எட்டிய தூரம் கம்பெனிகள் தான் இருக்கின்றன. கோவையில் வளர்ச்சி இப்படி என்றால், அவினாசியின் ஒரு அங்கமாக இருந்த திருப்பூர், இன்றைக்கு டாலர் சிட்டியாக உருவெடுத்தது.
கோவை வளரவும், திருப்பூர் வளரவும் முக்கிய காரணம், தனிநபர்களின் தொழில்களை செய்ய வேண்டும் என்ற ஊக்கமான முயற்சி தான். ஒருவர் ஆரம்பித்த தொழிலை பார்த்து இன்னொருவர் ஆரம்பித்து, அதன்பின்னர் இன்னொருவர் அதேபோல் பலரும் ஆரம்பித்தனர். பனியன்களின் நகரமாக திருப்பூர் உருவெடுக்க காரணமாக அமைந்தது. கோவை திருப்பூர் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவருமே முதலில் தறி பட்டறை வைக்கவோ அல்லது ஸ்பின்னிங் மில் வைக்கவோ அல்லது கிரைண்டர் உற்பத்தி, கோழிப்பண்ணை உள்பட ஏதாவது தொழில்கள் செய்யவே விரும்புவார்கள். வேலைக்கு போவதை விட தொழில் செய்வதையே கோவை மக்கள் விரும்புவார்கள். இதுதான் கோவை வளர காரணம்.
சென்னையில் தனிநபர்கள் தான் தனித்திறமையால் சாதித்து புகழ் பெற்றிருப்பார்கள். உதாரணத்திற்கு திரைத்துறையில், ஐடி துறையில் கோலோச்சுவார்கள். ஆனால் கோவையில் அப்படி அல்ல.. உற்பத்தி சார்ந்த நிறுவனங்களை வளர்த்து அதில் தான் முன்னேற விரும்புவார்கள். ஐடி துறையின் வளர்ச்சிக்கு பிறகு சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் வளர்ந்துவிட்டது. கோவையிலும் தற்போது ஏராளமான ஐடி நிறுவனங்கள் வந்துள்ளன.
பெங்களூரை எடுத்துக் கொண்டால் அங்கு ஏராளமான பொதுத்துறை நிறுவனங்கள் 80களில் இருந்தன. அதனால் படித்த நடுத்தர வர்க்கத்தினர் அங்கு அதிக அளவில் உருவானார்கள். அதுவே பெங்களூரு ஐடி துறையில் மிகப்பெரிய அளவில் வளர காரணமாக இருந்தது. சென்னையை பொறுத்தவரை தற்போது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களே அதிக அளவில் இயங்குகிறது. ஆனால் கோவை முற்றிலும் சிறு குறு தொழில் முனைவோர்களால் உருவான நகரமாகும்.
கோவையில் உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் உலக அளவில் இன்று புகழ் பெற்று திகழ்கின்றன. அதேநேரம் கோவையில் உள்ளது போன்று உற்பத்தி சார்ந்த துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சி சென்னையில் இன்று வரை இல்லை என்பது மறுக்க முடியாது உண்மை. கோவையில் உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு இன்னும் ஊக்கம் அளித்து சிறு தொழில்முனைவோர்களை அதிகப்படுத்துவதுடன், நகரத்தின் கட்டமைப்பை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.












Click it and Unblock the Notifications