எட்டு தேர்தலில் எடப்பாடிக்கு அடிமேல் அடி!- ஈரோடு கிழக்கில் திமுக வெற்றிக்கு யார் காரணம்?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு இடிபோல் இறங்கியுள்ளது. அதிமுக அவரது தலைமைக்குச் சென்றதிலிருந்து தொடர் தோல்விகளை அவர் சந்தித்துவருகிறார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பிலிருந்தபோது நடந்த 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வென்றதால், மாபெரும் தோல்வியை அவர் முதல்முதலாக தழுவினார்.
அடுத்து 2019 நாடாளுமன்றத் தேர்தல். அதிலும் பெரிய அடி. அதிமுக சார்பாக ஒ.பி.எஸ் மகன் மட்டுமே வென்றார். 2019இல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தோல்விதான்.

எடப்பாடி சந்தித்த 8 தோல்விகள்:
அதன்பின் 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல். 2021இல் சட்டமன்றத் தேர்தல். 2021இல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல். 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். இறுதியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல். இப்படி எட்டு தேர்தல்களில் இதுவரை தோல்வியை மட்டுமே பெற்றுள்ளார் எடப்பாடி. அதிமுகவை ஒற்றைத் தலைமைதான் காப்பாற்றும் என அவர் கூறினாலும், அவரை மக்கள் இதுவரை எந்தத் தேர்தலிலும் காப்பாற்றிக் கரை சேர்க்கவில்லை.
ஆனால், வீராவேசமாக மேடைகளில் மட்டும் பேசி வருகிறார் என்கிறார்கள் அதிமுகவின் எதிர் கோஷ்டியினர். இந்தத் தோல்விக்கு 'துரோகி'யே காரணம் என அனல் பறக்கும் அறிக்கையை விட்டுள்ளார் ஒ.பன்னீர்செல்வம். அதேபோல் டிடிவி தினகரனும் ஈபிஎஸ்-ஐ விமர்சித்து வருகிறார். 'நான் சொல்வது அவருக்குப் புரியவில்லை. அதற்குக் காரணம் ஒன்று, செவிடா இருக்க வேண்டும். இல்லை என்றால் திமிராக இருக்க வேண்டும். அதிமுக அணி எடப்பாடியால் இன்னும் பலவீனமாகும்" என்கிறார்.
இந்நிலையில்தான் தனது பிறந்தநாளைத் தேசிய தலைவர்களை அழைத்து தடபுடலாகக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின், தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில், "இன்று ஈரோடு..நாளை நம் நாடு! இந்தியா முழுவதும் விடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதிமுகவுக்கு இந்தத் தோல்வி கவுரவமா?
இந்திய அளவில் தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் இடத்திற்கு மு.க.ஸ்டாலின் முன்னேறிக் கொண்டிருக்கும் போது எடப்பாடி பழனிசாமி உள்ளூரிலேயே முழுத் தோல்வியைப் பெற்றுள்ளார். இப்படி அடி மேல் அடி பெற்று வரும் எடப்பாடி பழனிசாமியின் நிலைமை பற்றி சிலரிடம் பேசினோம். இது பற்றி பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன், "இளங்கோவன் பெற்ற 1லட்சத்து 10 ஆயிரம் வாக்குகளை ஒப்பிடும்போது அதிமுக வேட்பாளர் தென்னரசு பெற்ற 43 ஆயிரம் வாக்குகள் என்பது அதிமுகவுக்குக் கவுரமான தோல்வி அல்ல; இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளபோது, எடப்பாடியின் ஆளுமை இங்கே கேள்விக்குறியாகிறது.
அவருக்கு இறுதி நேரத்தில் எல்லாம் கைகூடி வந்தது. ஒ.பி.எஸ். தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றார். அதே போல டி.டி.வி தினகரன் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற்றார். எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கு இரட்டை இலை சின்னமே கிடைத்தது. அப்படி இருந்தும் இந்தத் தோல்வி ஏற்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
கொங்கு மண்ணின் மைந்தன் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னாரே? அந்தக் கொங்கு மண்ணில் நடந்த தேர்தலில், திமுகவை நீங்கள் வெற்றி பெறவைத்துள்ளபோது உங்களது செல்வாக்கு இவ்வளவுதானா?' என்று கேள்வி எழுகிறது.
ஆகவே தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது என்றே நான் சொல்வேன்.
ஒரு தலைவருக்கு உரியப் பண்பு என்பது, தவறுகள் நடக்கலாம்.. வெற்றி தோல்விகள் இருக்கலாம்... அப்படி வரும் போது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தவறு தன்மீது இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும். அதுவே தலைவருக்கான பண்பு. 5 பக்க அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நான் என்ன எதிர்பார்த்தேன் என்றால், 'கிடைத்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்' என்ற ஒற்றை வரி இருந்திருக்கவேண்டும். அதைத்தான் ஒரு தலைவனாக எடப்பாடி பழனிசாமியிடம் நான் எதிர்பார்த்தேன்.

ஏமாற்றத்தில் அதிமுக தொண்டர்கள்:
இனிமேலாவது அதைப் போன்ற கருத்துகளை அவர் முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்குக் கீழாக உள்ள தலைவர்களுக்கும் அவரது லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் அது நம்பிக்கை அளிக்கும். அதை எடப்பாடி பழனிசாமி செய்யத் தவறிவிட்டார். ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் சலிப்பிலும் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதைய கள நிலவரமாக உள்ளது" என்கிறார்
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெற்ற சிறுபான்மை ஓட்டுக்களில் பெரும் அளவை இந்த இடைத்தேர்தலில் இழந்துள்ளது. அதிமுக அணி தற்போது நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தலில் 25.75% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 38.41% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆக, ஏறக்குறைய 12.66% வாக்குகளை அக்கட்சி இம்முறை இழந்துள்ளது.
அதே கடந்த 2021இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக, 44.27% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த இடைத்தேர்தலில் 65.58% வாக்குகளைப் பெற்று முன்னேறி உள்ளது. சுமார் 20.31% வாக்குகளைக் கூடுதலாக இக்கட்சி ஈர்த்துள்ளது.
இந்தளவுக்கான ஓட்டுச் சதவீதம் அதிமுகவுக்குச் சரிந்ததற்கு, இஸ்லாமியர்கள், பட்டியலினத்தினர் மற்றும் நெசவாளர் வாக்குகளை இழந்ததுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரோட்டில் உள்ள திருநகர் காலனி, கிருஷ்ணம் பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில், 1504 வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை 1203 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 296 வாக்குகளை அக்கட்சி பெறத் தவறியுள்ளது. ஆனால் திமுக கடந்த தேர்தலில் இதே பகுதிகளில் 1966 வாக்குகளை மட்டுமே பெற்றது. ஆனால் இம்முறை 3082 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய 1116 வாக்குகள் அதிகம்.

ஏறுவரிசையில் திமுக வாக்கு சதவீதம்:
இதே மாதிரி தூய்மைப் பணியாளர்கள் நிறைந்த ராஜாஜிபுரம் பகுதியில் முந்தைய தேர்தலில் 869 வாக்குகளைப் பெற்றிருந்த அதிமுக, இந்த இடைத்தேர்தலில் 343 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது முன்பைவிட526 வாக்குகள் குறைவு. திமுக கூட்டணி கடந்த முறை 931 வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை 1776 வாக்குகளைப் பெற்று, சுமார் 863 வாக்குகளைக் கூடுதலாக ஈர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பி.பி. அஹ்ரஹாரம் பகுதியில் கடந்த முறை அதிமுக 3884 வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறையோ 2750 மட்டுமே பெற்றுள்ளது. 1134 வாக்குகளை அக்கட்சி இந்த இடைத்தேர்தலில் இழந்துள்ளது. திமுக கூட்டணியோ, கடந்த முறை 6127 வாக்குகள் பெற்றிருந்தநிலையில் இடைத்தேர்தலில் 9002 வாக்குகளை அதிகம் பெற்று 2875 புதிய வாக்காளர்களை ஈர்த்துள்ளது.
இப்படிப் பல இடங்களில் அதிமுக தனது செல்வாக்கைப் பட்டியலின மற்றும் இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதிகளில் இழந்துள்ளது என்கின்றன தேர்தல் முடிவுக்கு பின்பான புள்ளிவிவரங்கள். வீரப்பன்சத்திரம், ஸ்டோனி பிரிஜ் எனப் பல பகுதிகளில் உள்ள மக்கள் அதிமுக கூட்டணியின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவேதான் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 66233 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி மிக ஆக்ரோஷமாக இந்த இடைத்தேர்தலில் தரம் தாழ்ந்து மிகக் கடுமையான சொற்களைப் பேசி பிரச்சாரம் செய்தார். அந்தளவுக்குப் பேசியும் எடப்பாடியின் பிரச்சாரம் எடுபடவில்லையா? என அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கேட்டோம். அதற்கு அவர், "எடப்பாடியே எடுபடவில்லை. அவரது பிரச்சாரம் எங்கே எடுபடப் போகிறது" என நக்கலாகத் தெரிவித்தார்.
மேலும் அவர், "எம்.ஜி.ஆர் ஆரம்பத்திலிருந்து தேர்தல்களில் வெற்றி முகம் கண்டவர். ஆனால், எடப்பாடி ஆரம்பத்திலிருந்தே தேர்தல்களில் தோல்வி முகம் கண்டுவருகிறார். டிரைவர் சரியாக இல்லை என்றால் மாற்ற வேண்டும். இல்லை எனில் பயணம் தொடராது. அதை நான் முன்பே சொல்லி இருக்கிறேன்" என்கிறார்

அதிமுக 2024இல் வெறும் 15% வாக்குகளைப் பெறாது:
இந்த இடைத்தேர்தலில் திமுக அணி, 66% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி வெறும்24%தான் பெற்றுள்ளது. இந்தளவு படுதோல்விக்கு என்ன காரணம்? அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம், அவர், "நான் 60% திமுக கூட்டணிக்கு வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், 66% என்பது நானே எதிர்பாராததுதான். ஆளும் கட்சிக்கு எதிராக அலை வீசுகிறது என்று சும்மா பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. அதைத்தான் இந்த வெற்றி காட்டியுள்ளது.
ஆளும்கட்சிக்கு எதிரான அலை கடந்த இரண்டே இரண்டு தேர்தல்களில்தான் வீசியுள்ளது. 1967இல் காமராஜருக்கு எதிராக வீசியது. 1996இல் ஜெயலலிதாவுக்கு எதிராக வீசியது. அதன் பின்னால் அப்படி ஒருநிலை தமிழ்நாட்டில் உருவாகவில்லை. அந்த உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒற்றை தலைமை என்பது ஒரு ஜாதி தலைமையாகச் சுருங்கிவிட்டது.
இப்படியே போனால், அடுத்த 2024 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாடு முழுவதும் 15% வாக்குகளைக் கூடப் பெறமுடியாது. அதை உறுதி
செய்யும் விதமாகத்தான் இந்த இடைத்தேர்தல் முடிவு வந்துள்ளத என்கிறார்
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications