போக்சோவில் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் இளம் பெண்கள், டீன் ஏஜ் பையன்கள்.. என்ன காரணம்?
சென்னை: 16 வயது பையனுடன் காதலித்து ஓடிப்போன பெண் கைது, 17 வயது பெண்ணை காதலித்த ஆண் கைது, பள்ளி மாணவனை காதலித்து திருமணம் செய்த பெண் கைது என்று செய்திகளை பார்த்திருப்போம். அண்மையில் கூட பெரியபாளையம் அருகே பிளஸ்-1 மாணவரை காதலித்து கடத்தி சென்ற 2 குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டார். பெண்களை பற்றி செய்தி தான் அதிகம் வரும் அதேவேளையில் 18 வயதை கடந்த இளைஞர்களும் மைனர் பெண்ணை காதலித்து சுற்றியதற்காகவும், திருமணம் செய்ததற்காகவும் போக்சோவில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள்..
இன்றைக்கு காதல் என்பது பள்ளி வயதிலேயே வந்துவிடுகிறது. 10ம் வகுப்பு தாண்டி ஒரு மாணவன் காதலிக்காமல் இருந்தால் ஆச்சரியம் என்கிற அளவிற்கு நிலைமை மாறி வருகிறது. 12ம் வகுப்பை தாண்டியும் யாரையும் ஒரு மாணவி காதலிக்காமல் கடந்து செல்கிறார் என்றால், உண்மையில் அவர் பாராட்டப்பட வேண்டியவர். ஏனெனில் சமூகம் அந்த அளவிற்கு மாறிவிட்டது.

காதல், காமம் என எல்லாவற்றையும் இன்றைய தலைமுறையினர் மிக எளிதாக பார்ப்பதால், பருவ வயதில் வரும் ஹார்மோன் மாற்றத்தை, தவறாக புரிந்து கொண்டு காதல் வலையில் விழுந்து விடுகிறார்கள். 18 வயது நிறைவு பெறாமலேயே காதலனுடன் ஜாலியாக சுற்றுவது, எல்லை மீறுவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
திடீரென காதலன் பிரேக் அப் செய்துவிட்டால், அந்த சிறுமி, நடந்ததை கூறி குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்தால், அந்த இளைஞன் காலத்திற்கும் சிறையில் தான் தவிக்க வேண்டிய நிலை வரும். அதேநேரம் 18 வயது நிறைவு பெறாத மைனர் பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்தால், கடத்தி சென்று திருமணம் செய்ததாக போக்சோவில் உள்ளே போக வேண்டிய நிலை உள்ளது.
18 வயது முதல் 23 வயது வரை உள்ள ஏராளமான இளைஞர்கள், இப்படி மைனர் பெண்ணை காதலித்து சுற்றியதற்காகவும், திருமணம் செய்ததற்காகவும் போக்சோவில் கைதாகி சிறையில் வாழ்க்கையை கழித்து வருகிறார்கள். ஒருவேளை 18 வயது நிரம்பிய அந்த பெண் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்து திருமணம் செய்தாலும், போக்சோ வழக்கு உடனே முடிந்துவிடாது. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். இந்த டீன் ஏஜ் காதலால் நீதிமன்ற படியேறியும், சிறையில் காலத்தை கழித்தும் இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள்..
இளைஞர்கள் தான் இப்படி வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்றால், நன்கு படித்த பெண்களுமே, டீன் ஏஜ் பையன்களை காதலித்து திருமணம் செய்ததற்காக சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். கன்னியாகுமரி, சென்னை, திருநெல்வேலி, மதுரை, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு நகரங்களில் அண்மைக்காலங்களில பெண்கள் சிறார்களை திருமணம் செய்ததாக கைதாகி உள்ளனர்.
அண்மையில் கூட திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வினோதினி (வயது 28) என்ற பெண் இப்படி கைதாகி உள்ளார். வினோதினிக்கு திருமணம் ஆகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். வினோதினி 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.பின்னர் காதலாக மாறியது. 2 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்கு சென்ற மாணவரை காணவில்லை. இதுகுறித்து மாணவரின் பெற்றோர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது தான், திருமணமான வினோதியுடன் பள்ளி மாணவருக்கு காதல் ஏற்பட்டதும் கல்பட்டு கிராமத்தில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பள்ளி மாணவரையும் அவருடன் பதுங்கி இருந்த வினோதினியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். வினோதினியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.பிளஸ்-1 மாணவரை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைத்துள்ளார்கள்.
18 வயது நிறைவு பெறாத பெண் அல்லது ஆணை காதலித்து, காதல் என்ற பெயரில் அத்துமீறுவது நிச்சயம் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மைனர்களை திருமணமே செய்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டாலும் அது தவறு தான். இதில் பாதிக்கப்பட்ட மைனர் பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்றால் கூடுதலாக எஸ்சி எஸ்டி சட்டமும் பாய்கிறது. பருவ வயதில் வரும் ஈர்ப்பை ஆண், பெண் இருவருமே காதல் என்ற பெயரில் தவறு செய்வது தான்.. வாழ்க்கையை அவர்கள் தொலைக்க காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் எப்படி முன்னேற வேண்டும் என்று யோசிக்க வேண்டிய வயதில் காதலில் விழுந்தவர்கள், கரையேற வழி தெரியாமல் திசை மாறி போகிறார்கள்.












Click it and Unblock the Notifications