நாட்டிலேயே தமிழகம்தான் டாப்! காரணம் என்ன தெரியுமா! அமைச்சர் பிடிஆர் சொன்ன வார்த்தை! அதிர்ந்த அரங்கம்
சென்னை: பெண்கள் முன்னேற்றத்திற்குத் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட அமைச்சர் பிடிஆர், இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
சென்னையில் 2023ஆம் ஆண்டுக்கான அவதார் மற்றும் செரமவுண்ட் விருது மற்றும் ஆண் அல்லி லெகசி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பிடிஆர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெண் வளர்ச்சியை முன்னிறுத்தி எடுக்கப்படும் தகவல்கள் குறித்தும் அவர் விரிவாக விளக்கினார்.
அமைச்சர் பிடிஆர்: இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர், "தமிழகத்தில் உற்பத்தித் துறையில் ஒப்பீட்டளவில் குறைவான பணியாளர்கள் இருந்தாலும், இங்குள்ள பெண்கள் உற்பத்தித் துறையில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண்களில் சுமார் 42% பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள்.
நாம் நாட்டின் மக்கள் தொகையில் வெறும் 6% மட்டுமே இருக்கும் போதிலும், அதிக ஊதியம் பெறும் பல வேலைகளில் தமிழர்களே இருக்கிறார்கள். பெண்களை வேலைக்கு அமர்த்துவது குறித்து பிளாக்ராக் (BlackRock) என்ற அமைப்பு விரிவான ஆய்வை நடத்தியிருந்தது. அதில் அதிக பெண்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிச் செயல்படும் நிறுவனத்தின் செயல்திறன் 29% வரை அதிகமாகவே இருக்கிறது. உண்மை இப்படி இருந்தாலும் அதிக சம்பளம் தரும் வேலைகளில் இன்னுமே பாலின ரீதியான பாரபட்சம் தொடரவே செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மகளிர் நலத்திட்டங்கள்: தொடர்ந்து பெண்களுக்காகத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களைப் பட்டியலிட்ட அமைச்சர் பிடிஆர், "திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 1 ஆண்டாக உயர்த்தப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உயர்கல்வி படிக்கும் சிறுமிகளுக்கு மாதம் ரூ.1000 டெபாசிட் செய்யப்படுகிறது.
மேலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுவதால் அது குறித்தும் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை. இவை எல்லாம் தவிர குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது.
நீதிக்கட்சி காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் நூற்றாண்டு கால கொள்கை மற்றும் பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் தமிழகத்தில் 90% பெண்கள் பள்ளிப் படிப்பை முடிக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஏன் முக்கியம்: இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே வேலைக்குச் செல்லும் நிலை இருக்கிறது. அங்குள்ள பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சமூகத்தில் சரிபாதி இருக்கும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்காதது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கவே செய்கிறது.
இந்த நிலை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான மகளிர் வேலைக்குச் செல்வது குடும்பங்களுக்கு மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் கூட பெரியளவில் உதவுகிறது என்பதே வல்லுநர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications