பிஎப் பணம் கேட்போருக்கு தராமல் நிராகரிப்பது சமீபமாக அதிகரித்தது ஏன்.. பின்னணியில் இப்படி ஒரு காரணம்!
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (epfo) கணக்கில் இருந்து இறுதித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களில் 3ல் 1 பங்கு நிராகரிக்கப்படுகிறது. மாத சம்பளம் வாங்குவோர் EPFO இல் பணம் எடுக்கும் போது என்ன தவறுகள் செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து இறுதித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களில் 3ல் ஒரு பங்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் 73.87 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 24.93 லட்சம் விண்ணபங்கள் (33.8 சதவீதம்) நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2017-18ம் ஆண்டில் 12.09 சதவீதம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. 2018-19ம் ஆண்டில் 18.2 சதவீதமும், 2019-20ம் நிதியாண்டில் 24.1 சதவீதமும், 2020-21ம் ஆண்டில் 30.8 சதவீதமும், 2021-22ம் நிதியாண்டில் 35.2 சதவீதமும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பணியாற்றியதன் மூலம் சேமித்த தொகையினை பெற முடியாமல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தவிக்கிறார்கள்.
பிஎப் என்று பொதுமக்களால் சுருக்கமாக அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது மாத சம்பளம் வாங்குவோர் இறுதி காலத்தில் சந்தோஷமாக வாழ்தற்கான பொக்கிசம் ஆகும்.. ஆனால் அன்றாட வாழ்வாதார செலவுகளை தாண்டி திடீரென அதிகரிக்கும் கல்வி செலவு, வீடு கட்டும் செலவு, மருத்துவ செலவு காரணமாக பிஎப் இல் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பிஎப் அட்வான்ஸ் சிக்கல்கள்: பிஎப் இல் பணத்தை அட்வான்ஸ் ஆக எடுக்க விரும்புவோர் அதற்கு EPFO தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.. ஆனால் விண்ணப்பிக்கும் பலர் செய்யும் தவறு என்ன வென்றால், ஒரே பிஎப் கணக்கிற்கு பணத்தை மாற்றாதது. ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர், இரண்டாவது நிறுவனத்தில் சேருவார்.. இரண்டாவது நிறுவனத்தில் சேர்ந்த உடன், முதல் நிறுவனத்தில் உள்ள பிஎப் கணக்கு பணத்தை கையோடு இரண்டாது அதாவது வேலை செய்யும் நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றிவிடுங்கள்.. அப்படி மாற்ற வேண்டும் என்றால், கண்டிப்பாக ஏற்கனவே வேலை செய்த நிறுவனம் பிஎப் கணக்கில் நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியை குறிப்பிட வேண்டும். ஒரு வேளை உங்கள் பழைய நிறுவனம் பிஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிடாவிட்டால் உங்களால் பிஎப் கணக்கில் பணம் எடுக்க முடியாது.
எனவே பிஎப் கணக்கில் முன்பணம் எடுக்க விரும்பினால் உங்கள் பழைய நிறுவனத்தின் ஹெச்ஆர்களை தொடர்பு கொண்டு பிஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிட சொல்லுங்கள். அப்படி குறிப்பிட வேண்டும் என்றால், நீங்கள் முறைப்படி நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து வர வேண்டும். அவர்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு உங்களை அனுப்பி வைக்க வேண்டும். அப்படி செய்தால் எந்த பிரச்சனையும் இன்றி பிஎப் கணக்கில் நீங்கள் விலகிய தேதியை அந்த நிறுவனமும் பதிவிட்டு விடும்.
அதன் பிறகு நீங்கள் பழைய பிஎப் கணக்கில் இருந்து உங்கள் புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியும். அப்படி மாற்றிய பின்னர் நீங்கள் பிஎப் அட்வான்ஸ் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தின் இறுதியில் பிஎப்பில் உள்ள வங்கி கணக்கின் செக் லீப்பை பென்சிலால் அடித்து அதை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் உங்கள் விண்ணப்பம் 20 நாளில் பரிசீலனை செய்யப்பட்டு 20 முதல் 25 நாளில் உங்கள் வங்கி கணக்கில் பிஎப் அட்வான்ஸ் தொகை சேர்ந்துவிடும்.
எல்லா நிறுவனங்களில் இருந்தும் வேலையை விட்டு நின்ற பின்னர், பிஎப் கணக்கு முடிக்கும் போது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கும் முக்கிய காரணமாக ஒரு வேளை உங்கள் பழைய நிறுவனம் பிஎப் கணக்கில் நீங்கள் வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிடாதது மட்டுமே இருக்கும். எனவே எந்த நிறுவனங்களில் எல்லாம் வேலை செய்தீர்களோ அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று வேலையை விட்டு நின்ற தேதியை குறிப்பிட சொல்லுங்கள்..
அவர்கள் நீங்கள் இபிஎப்பில் வேலையில் சேர்ந்த நாள் ராஜினாமா செய்த நாளை குறிப்பிட்ட பின்னர் நீங்கள் கடைசியாக வேலை செய்த நிறுவனத்திற்கு அனைத்து பணத்தையும் மாற்ற விண்ணப்பியுங்கள். விண்ணப்பித்த கையோடு பழைய அல்லது புதிய நிறுவனத்தின் ஹெச்ஆரை அழைத்து பிஎப் கணக்கில் பணத்தை மாற்றிய தகவலை கூறி ஒப்புதல் கேளுங்கள். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் பணம் உங்கள் புதிய பிஎப் கணக்கிற்கு முழுமையாக வந்துவிடும். அதன்பின்னர் நீங்கள் மொத்தமாக பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எளிதாக எடுக்கலாம். 20 நாளில் பணம் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.












Click it and Unblock the Notifications