சார்கள், தம்பிகள் உடன் திமுகவுக்கு என்ன தொடர்பு? அதை சொல்லுங்க.. விளக்கம் கேட்கும் எல்.முருகன்!
சென்னை: "சார்கள், தம்பிகள் உடன் திமுகவுக்கு உள்ள தொடர்பு என்ன என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். திமுக அரசு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளது." என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை பரங்கிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சார் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போல அரக்கோணத்தில் ஒரு சகோதரி திமுக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்திலும் பல சார்களுக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கிலும் சார்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

அரக்கோணம் சம்பவத்தை தமிழக காவல்துறை மூடி மறைக்கப் பார்க்கிறது. திமுக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்த சகோதரிக்கு பாஜக துணை நிற்கிறது. தமிழ்நாட்டில் தம்பிகளின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த சார்களுக்கும், தம்பிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தம்பிகளுக்கும் திமுக குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தம்பிகளும் சார்களும் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலை உள்ளது.
பொள்ளாச்சியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைத்துள்ளது. அதே போல அரக்கோணம் வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நியாயம் கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. அமலாக்கத்துறை இதனை முறைப்படி எதிர்கொள்ளும். தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்ததின் முன் வைப்பார்கள். இந்த வழக்கு இன்னும் நிறைவு பெறவில்லை. டாஸ்மாக் முறைகேட்டில் தவறு செய்தவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை பெறுவார்கள்." என்றார்.
மேலும் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், "தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து பேசுவதற்கான தருணம் இதுவல்ல" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications