"பொய் வழக்கு.. அரசியல் காழ்ப்புணர்ச்சி!" சிறையிலிருந்து வெளியே வந்ததும் செந்தில் பாலாஜி பரபர
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார். சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், மாலை அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். புழல் சிறையில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சில முக்கிய தெரிவித்தார்.
சட்டவிரோத பணி பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது அவர் அரசு வேலை தரப் பலரிடம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்த நிலையில், அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து அவர் நீதிமன்றத்திலேயே இருந்தார்.
உற்சாக வரவேற்பு: பல முறை ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட போதிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. விசாரணை தொடர்ந்த நிலையில், அவருக்கான நீதிமன்ற காவல் மட்டும் நீட்டிக்கப்பட்டது. இன்று தான் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று மாலை அவர் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அங்குப் பெருந்திரளாகத் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர். இதனால் புழல் சிறையைச் சுற்றி இருந்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்தித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், சட்டப் போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.
பேட்டி: அவர் கூறுகையில், "என் மீது அன்பும் நம்பிக்கையையும் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதிக்கும் வாழ்நாள் நன்றிகள்.. என் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு.. இதை நான் சட்டப்படி எதிர்கொண்டு இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவேன். முதல்வர் என் மீது வைத்துள்ள அன்புக்கும் நம்பிக்கைக்கும் வாழ்நாள் முழுக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றார்.
உடல்நிலை: செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்த நிலையில், இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இது குறித்து தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர், "இப்போது பரவாயில்லை.. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனைக்குச் செல்வேன்.
மீண்டும் பரிசோதனை செய்தால் தான் இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது தெரிய வரும். கரூர் மாவட்ட மக்களுக்கு எப்போதும் வாழ்நாள் முழுக்க நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றார். மேலும், தனது கட்சித் தலைவர், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தன்னை சகோதரரைப் போலப் பார்த்துக் கொண்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications