தமிழகத்தில் மழை தான்.. ஆனா சென்னையில் கொளுத்தும் வெயில்.. வெதர்மேன் ட்வீட்.. கதறும் நெட்டிசன்கள்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் மெல்லக் குறைந்து வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம் அதன் பின்னர் தொடர்ந்து உச்சம் தொட்டே வந்தது. இடையில் சில நாட்கள் மோச்சா புயல் காரணமாகச் சற்று மழை வந்தது.
சில நாட்களில் புயலும் கரையைக் கடக்க அதன் பின்னர் வெயில் மீண்டும் உயர்ந்தது. இதனால் தமிழ்நாடு முழுக்க வெப்பம் தொடர்ந்து உச்சம் தொட்டே வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வானிலை:
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க கிட்டதட்ட இதே நிலைதான். குறிப்பாக டெல்லி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெயில் உச்சம் தொட்டது. கோடைக் காலம் முழுக்க வெப்பம் தொடரும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மதிய நேரங்களில் மக்கள் வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தலைநகர் சென்னையில் தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியே வெப்பம் பதிவாகி வந்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இன்றைய நாள் மேகமூட்டத்துடன் தொடங்கினாலும் கூட அது சென்னை வெப்பம் 40 C (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டுவதைத் தடுக்கவில்லை. மதியம் 2.30 மணி ஆகிறது.
வெதர்மேன்:
இப்போது தான் கடல் காற்று நுங்கம்பாக்கத்தில் நுழைந்துள்ளது.. சென்னையின் மேற்குப் பகுதியிலிருந்து வேலூர் வரை இன்று வெப்பம் குறைந்து சில்லென்று இருக்கிறது. தமிழகத்தின் உள்பகுதிகள், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரியின் சில பகுதிகளில் மழை பெய்யும். ராமநாதபுரம் உள்பகுதிகளிலும் அரிதாக மழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதாவது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றாலும் கூட சென்னையில் இன்றும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையமும் வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

எப்படி இருக்கும்:
அதாவது, தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 80 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications